மஹிந்த ராஜபக்சவின் தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

0131502முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் தோல்வியின் மூலம் நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

சுமார் முப்பது வருடங்களாக இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்தத்தை வெற்றி கொண்டதன் மூலம் தன்னை ஒரு கதாநாயகனாக உள்ளூரிலும் சர்வதேச நாடுகளிலும் வர்ணித்துக்காட்டி வந்துள்ள இவரின் தோல்வி இவருக்கே வியப்பாகவிருந்துள்ளது.

பயங்கரவாதம் இடம்பெற்று வரும் ஏனைய நாடுகளும் கூட பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தன்னிடமே ஆலோசனை பெற வேண்டும் என்ற பாங்கில் தன்னை உலகுக்கு காட்டி வந்துள்ளார்.

இதன் காரணமாகவே யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களது படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை பேரவையில் தொடர்ச்சியாக எடுத்து வந்த தீர்மானங்களையும் கூட துச்சமென மதித்து அவற்றை நிராகரித்து வந்தார்.

இதன்மூலம் சர்வதேச ஆதரவுகளை இழந்து நின்றார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா வழங்கி வந்த ஆலோசனைகளையும் கூட மதியாமல் இப்பிரச்சினையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதில் இழுத்தடிப்பு செய்து வந்தார்.

இரண்டு முறைதான் ஒருவர் நாட்டில் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என இலங்கை அரசியல் யாப்பில் வழி வகுக்கப்பட்டிருந்தாலும் அதனையும் மீறி அரசியல் யாப்பிற்கு 18வது திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் இரண்டு முறைக்கு மேலும் ஒருவர் பதவியிலிருக்கலாம் என்ற நிலைமையை உருவாக்கினார்.

தான் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டும் என்ற அபிலாஷையின் காரணமாகவே இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார் என்பது வெளிப்படை. இத்தேர்தலில் நானே போட்டியிடுவேன் என்றும் அதில் நானே வெற்றி ஈட்டுவேன் என்றும் பிடிவாதமாக செயற்பட்ட ராஜபக்சவுக்கு தேர்தலில் ஏற்பட்ட தோல்வியானது இந்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

அவரை தோற்கடிக்க வேண்டுமென அதற்காக போராடி வந்தவர்களும் அவர் தோல்வியுறத்தான் வேண்டும். நாட்டில் மாற்றம் ஒன்று நிச்சயமாக தேவை என மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து வந்த மக்களும் கூட கடைசி நிமிடம் வரை இது உண்மையிலேயே சாத்தியமாகுமா என சந்தேகம் கொண்டிருந்தனர்.

எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என மக்கள் எதிர்பார்த்த வண்ணமிருந்தனர். இவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு இவரது கட்சியிலிருந்து பொது செயலாளர் மைத்திரிபால சிறிசேன முன் வருவார் என்று இவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

மிகவும் இரகசியமான முறையில் நன்கு திட்டமிடப்பட்டு இறுதி நேரத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டது மஹிந்த ராஜபக்சவுக்கு பேரதிர்ச்சியை தோற்றுவித்திருந்தது.

காரணம் போட்டியிடுவதற்கு வேறு யார் முன்வந்திருந்தாலும் அவரை மிகவும் இலகுவாக வெற்றி பெற்று விடலாம் எனவும் அவ்வாறான ஒருவரையே எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு மைத்திரிபால சிறிசேன போட்டியிட முன் வந்தது தன்னை நிலைகுலைய செய்தது மட்டுமல்ல பெரும் சினம் கொள்ளவும் செய்தது.

இவர் எவ்வளவுதான் அரசியலில் வெற்றி தோல்விகளை பொதுவானதொன்றாக எடுத்துக் கொண்டிருந்தாலும் அதற்கெல்லாம் மேலாக இவர் ஜாதகங்களிலும் ஜாதகர்களின் வாக்குகளிலும் அசையா நம்பிக்கை கொண்டிருந்தார்.

அதற்காகவே தனக்காக நிரந்தரமான ஜாதகர் ஒருவரை வைத்துக்கொண்டு தான் ஆரம்பிக்கும் எல்லா வேலைகளையுமே சுப நேரங்களில் தீர்மானித்து தனது வெற்றியின் இலக்கை நோக்கி செயற்பட்டு வந்தார்.

இம்முறையும் நீங்களே வெற்றி ஈட்டுவீர்கள் என்று உறுதியளித்திருந்த ஜாதகரின் வாக்குறுதியில் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். எனவேதான் சென்ற இடங்களிலெல்லாம் திரட்டப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தில் பேசும் போது தான் எதனை சொன்னாலும் மக்கள் அதனை நம்புவார்கள் என்ற ரீதியில் தனக்கே உரித்தான இறுமாப்போடு பேசி வந்தார்.

இவர் சென்ற இடங்களிலெல்லாம் சமுகமளித்திருந்த கூட்டங்கள் எவ்வாறு கூட்டப்பட்டது என்பது பொதுவாகவே மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்ட ஒரு விடயமாகவிருந்தது. ஓரிடத்தில் கூட்டம் என்றால் வெவ்வேறு இடங்களிலிருந்து மக்கள் அழைத்து வரப்பட்டு பெரும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே கூட்டம் முடியும் வரை அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர் என்று சொல்லப்பட்டது.

தேர்தலில் ராஜபக்ச தோல்வியுறுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. தனக்கு இன்னும் நல்ல காலம் தொடர்கின்றது என்றும் இத்தேர்தலில் நான் என்ன வழியிலாவது வெற்றி பெறுவேன் எனவும் ராஜபக்ச திடமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆனால், இவருக்கு எதிராக வாக்களித்த சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற அனைத்து மக்களும் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் பக்குவமாகவும் நடந்து கொண்டு ராஜபக்ச மீது தாங்கள் கொண்டிருந்த அதிருப்தியை தமது வாக்கு பலத்தின் மூலம் எடுத்துக்காட்டியுள்ளனர்.

இது குறித்து தேர்தலுக்கு பின் கருத்து வெளியிட்ட ராஜபக்ச தன்னை தோல்வியுற செய்தது தமிழ், முஸ்லிம் மற்றும் தோட்டவாழ் தமிழ் மக்கள்தான் என கூறியுள்ளதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் அசோக் கே.மேத்தா தனது பத்திரிகை அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

வட பகுதி தமிழ் பேசும் மக்கள் இவருக்கு எதிராக வாக்களித்ததற்கு காரணம் அங்கு யுத்தம் முடிவுற்றிருந்தாலும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமை தமக்கு சொந்தமான இடங்களை இராணுவத்தினர் அபகரித்துக் கொண்டுள்ளமை, இராணுவ அதிகாரியை கவர்னராக வைத்துக்கொண்டு சிவில் நடைமுறைகளை ஒடுக்கப்பட்டு வந்துள்ளமை, மாகாண சபை அதிகாரங்களில் வீண் தலையீடுகள் போன்ற பல்வேறு அவலங்களுக்கு முகம் கொடுத்து வந்திருந்தாலும் அவை எதனையும் ராஜபக்ச தனது காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை.

மேலும் முஸ்லிம் மக்கள் மீது தொடுக்கப்பட்டு வந்துள்ள இனவாத தாக்குதல் சம்பவங்கள் திட்டமிடப்பட்ட முறையில் பள்ளிவாசல்கள் இந்து, கிறிஸ்தவ, வணக்கஸ்தலங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ராஜபக்ச மீது வெறுப்பு கொள்ளும் நிலையைத் தோற்றுவித்திருந்தன.

தோட்ட தொழிலாளர்களது காணி வீடில்லாத பிரச்சினை மற்றும் ஏற்கனவே தோட்டங்களில் வங்கிகள் மூலம் கடன்களை பெற்று குடியிருப்புக்களை அமைத்து கொண்டுள்ளவர்களுக்கு வீட்டு உரிமை பத்திரம் வழங்கப்படாமை தொடர்ச்சியாக தொழிலாளர் ஏமாற்றப்பட்டு வந்துள்ளமை போன்ற விடயங்கள் தோட்டத் தொழிலாளர்கள் ராஜபக்ச மீது வெறுப்படைய செய்யும் நிலையை தோற்றுவித்திருந்தது.

இதன் காரணமாகவே வீதிகளில் இறங்கி கோஷங்களை எழுப்பி போராடி வந்த மலையக மக்கள் தங்களுக்கு தேவையான நாட்டின் புதிய தலைவன் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் முனைப்பாக செயற்பட்டனர்.

கடந்த 1998ம் ஆண்டு முதல் தனியார் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூட்டு ஒப்பந்த முறையிலான சம்பளத்தை கடந்த இரண்டு வருடங்களாக இத்தொழிலாளர்களுக்கு வழங்க ராஜபக்ச அரசு மறுத்து வந்துள்ளது.

இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்சவின் அரசு நேரடியாகவே தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வந்தன. அரசாங்கத்துக்கு சொந்தமான தோட்டங்களில் தொழிலாளர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவை உரிய வங்கிகளில் வைப்பிலிடப்படாமலும் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களது சேவைக்காலப் பணம் அவர்களுக்கு வழங்கப்படாமல் கோடிக்கணக்கான ரூபா மோசடி செய்யப்பட்டது.

அரச தோட்டங்களில் களவு, ஊழல், வீண்விரயம் போன்றவை தாராளமாக இடம்பெற்று வந்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த கஷ்ட நஷ்டங்கள் தொடர்பாக தொழிற்சங்கங்களால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்துள்ள புகார்கள் எதனையும் ராஜபக் ஷ கடுகளவேனும் தனது காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை.

ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் வீண் விரயமாக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தில் ஒரு சிறு பகுதியையேனும் இந்த தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்தால் அது அவர்களுக்கு பெரும் விமோசனமாகியிருக்குமல்லவா!

மேலும் இந்நாட்டின் பெரும் தொழிற்சங்க சம்மேளனங்களின் மூலம் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் முன்வைக்கப்பட்டு நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படவிருந்த தொழிலாளர் சாசனத்தை சட்டமாக்குவதில் மஹிந்தவின் அரசு பின் வாங்கியமை, தோட்ட தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை வழங்குவதில் அசிரத்தை மேற்கொண்டமை, மஹிந்த ராஜபக்ச தொழிற்சங்க சம்மேளன தலைவர்களை சந்தித்து இவற்றிற்கான இறுதி தீர்மானங்களை எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்து வந்தமை போன்ற காரணங்கள் தொழிற்சங்க தலைவர்கள் இவர் மீது வெறுப்புக்கொள்ள செய்தது.

இதன் காரணமாகவே மஹிந்த ராஜபக்சவோடு ஆரம்ப காலம் தொட்டு ஒன்றாக செயற்பட்டு வந்த தொழிற்சங்க தலைவர்கள் கூட விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு அவர்களும் அவருக்கு எதிராக செயற்பட்டதில் வியப்பொன்றுமில்லை.

மஹிந்த ராஜபக்சவுக்கு 2016ம் ஆண்டு வரை பதவியிலிருப்பதற்கு அரசியல் யாப்பில் இடமிருந்தது. இருப்பினும் 2015லேயே தேர்தலை நடத்தினால் தனக்கு வெற்றிகிட்டும் என்ற நப்பாசையில் தேர்தலை நடத்த முன்வந்தார். இந்த முடிவுக்கு தனது கட்சியிலிருந்த ஒரு பிரிவினரிடமிருந்து எதிர்ப்புக்கள் தோன்றின.

இப்போது தேர்தலை நடத்த வேண்டாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து விட்டு பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கி அதனூடாக அடுத்த தேர்தலை சந்திக்கலாம் என்று அவர்கள் கூறிய ஆலோசனைகள் எதனையும் மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் இத்தேர்தலில் தான் வெற்றி ஈட்டுவேன் என்ற அசையா நம்பிக்கையில் இருந்ததேயாகும்.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கும் இவர் எந்த ஒரு கரிசனையும் மேற்கொள்ளவில்லை. வெற்றிகொள்வதற்கு முன்பு தான் இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வினை ஏற்படுத்துவேன் என்ற வாக்குறுதிகளை அளித்து வந்த அவர் யுத்தத்தில் வெற்றிக்கொண்ட பின்பு அவ்வாறான ஒரு பிரச்சினை இருப்பதாக கூட இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

யுத்தம் முடிந்த கையோடு யுத்த வெற்றியினை மாத்திரம் கருவாக வைத்து கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பிரபல்யப்படுத்தி அவர்களின் முழு ஆதரவுடனேயே தனது அரசியலைத் தொடர முற்பட்டார்.

இன ரீதியிலான அரசியலை நடத்தி வந்த ராஜபக்சவுக்கு எதிராக சிறுபான்மை இன மக்கள் மாத்திரமல்லாமல் இந்நாட்டில் கல்விமான்கள் புத்திஜீவிகள் என்று பலரது எதிர்ப்புக்களையும் அவர் இத்தேர்தலில் சந்திக்க நேரிட்டது.

-எஸ். இராமநாதன்

-http://www.tamilwin.com

TAGS: