கிழக்கு உக்ரைனில் மூன்று ராணுவ வீரர்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என அந்த நாட்டு அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறியுள்ளார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடிய அவர், இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து மெர்க்கெல்லின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமர் மெர்கெல்லுடன் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.
உக்ரைனுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்கீழ், கிழக்கு உக்ரைனிலிருந்து வெளியேறும் ராணுவத்தினர் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நிகழ்த்தி 3 பேரைக் கொன்றிருப்பது அந்த ஒப்பந்தத்தைக் குலைக்கும் செயல் என பிரதமரிடம் பொரொஷென்கோ தெரிவித்தார். மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற, போர் முனையிலிருந்து கனரக ஆயுதங்களைத் திருப்பப் பெற்றது உள்பட, உக்ரைன் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிபர் பொரொஷென்கோ விளக்கினார்.
மின்ஸ்க் நகரில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மெர்க்கெல்லும் வலியுறுத்தினார். சண்டை நிறுத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி கிளர்ச்சியாளர்களை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வற்புறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இரண்டு வாரங்களுக்கு முன்பு பெலாரஸ் நாட்டுத் தலைநகர் மின்ஸ்கில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், கிழக்கு உக்ரைனில் ஆங்காங்கே தொடர்ந்து சண்டை நிகழ்ந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அந்தப் பகுதியில் சண்டை ஓய்ந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் நிகழ்ந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது அந்த நம்பிக்கையைக் குலைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
-http://www.dinamani.com