”வீரனுக்கு மரணம் என்பதே இல்லை”: மக்கள் கண்களில் கண்ணீராய் நிரம்பிய போரிஸ்

poris_memorial_001மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ஸ்ட்சோவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கடும் விமர்சகரான போரிஸ் நெம்ஸ்ட்சோ கடந்த மாதம் 27ம் திகதி நள்ளிரவில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் போரிஸின் ஆதரவாளர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ரஷ்ய தலைநகரான மொஸ்கோவில் போரிஸ் சுட்டுக்கொல்லப்பட்ட Kremlin என்ற இடத்தில் நேற்று சுமார் 50 ஆயிரம் மக்கள் திரண்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.

ரஷ்ய கொடிகள், போரிஸின் உருவம் பதித்த படங்கள் மற்றும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஊர்வலமாக Bolshoy Moskvoretsky பாலத்தில் சென்றனர்.

வழிநெடுகளிலும் ஒலிப்பெருக்கிகள் மூலம் ‘போரிஸ் என்ற மாவீரனுக்கு மரணமே இல்லை’, ரஷ்யாவில் பல சீர்த்திருத்தங்களை உருவாக்கிய அரசியல் மேதை’, ‘எனக்கு பயமே இல்லை’ உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

மேலும், போரிஸின் முதுகு நான்கு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதை நினைவுப்படுத்தும் வகையில், ரஷ்ய தேசிய கொடியில் நான்கு துளைகள் வரைந்து அதிலிருந்து ரத்தம் வடிவது போல் கொடியை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

போரிஸ் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு சென்ற மக்கள் மெழுகுவர்த்திகள், மலர் வளையங்கள் உள்ளிட்டவைகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

போரிஸின் கொடூர மரணத்திற்கு உலகத்தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பியதுடன், அவரது இறுதி ஊர்வலத்திற்கு மரியாதையும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

-http://world.lankasri.com