உலகில் முன்னுதாரணமிக்க எளிமையான அதிபராக வாழ்ந்து ஓய்வு பெற்ற ஜோஸ் முஜிகாவுக்கு உருகுவே மக்கள் பிரியா விடை கொடுத்து அனுப்பினர். உருகுவே நாட்டின் அதிபர் இருந்தவர் ஜோஸ் முஜிகா. இவருக்கு வயது 77. அதிபருக்கு உருகுவே அரசு வழங்கும் ஆடம்பர மாளிகையை புறக்கணித்துவிட்டு, புழுதி படிந்த சாலையோரம் மனைவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவர் வாழ்ந்து வருகின்றார். அவரது வீட்டுக்கு இரண்டே இரண்டு போலீசார்தான் காவல் காக்கின்றனர். வீட்டுக்கு பின்புறம் உள்ள பண்ணையில் மனைவியுடன் சேர்ந்து இவர் மலர் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றார். மாதாந்திர சம்பளத்தில் 90% அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, உருகுவே குடிமகனின் சராசரி சம்பளமான 775 அமெரிக்க டாலர்களை வைத்தே தனது குடும்ப செலவினங்களை ஜோஸ் முஜிகா சமாளித்து வருகின்றார்.
ஒரு கார்தான் சொத்து 2010-ம் ஆண்டு தனது சொத்து கணக்கை சமர்ப்பித்த இவர், 1987-ம் ஆண்டில் வாங்கிய ‘வோக்ஸ் வேகன் – பீட்டில்’ காரை மட்டுமே தனது சொத்தாக காட்டியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 1800 அமெரிக்க டாலர்கள்.
கொரில்லா போராளி 2009-ம் ஆண்டு உருகுவே நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஸ் முஜிகா, 1960-70களில் உருகுவே கொரில்லா புரட்சி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1971-ம் ஆண்டு முதல் 1985 வரை பலமுறை தனிமைச்சிறை உள்பட அடக்குமுறை சட்டங்களின் மூலம் பல்வேறு கடுமையான தண்டனைகளை இவர் அனுபவித்துள்ளார்.
ஏன் இந்த வாழ்க்கை? சிறை வாழ்க்கைதான், தன்னை பக்குவப்படுத்தியது என்னும் ஜோஸ் முஜிகா, இரு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னைப் பற்றி கூறியதாவது: விசித்திரமான முதியவராக நான் தோன்றலாம். ஆனால், இது எனது விருப்பமான தேர்வு. இதேபோல்தான் என் வாழ்நாளின் பெரும்பகுதியை நான் கழித்துள்ளேன். இருப்பதைக் கொண்டு என்னால் சிறப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மிகவும் ஏழை அதிபர் என்று என்னை அழைக்கின்றார்கள். ஆனால், என்னைப் பொருத்த வரை நான் ஏழை அல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைகின்றவர்கள்தான் ஏழைகள் என்று கூறியிருந்தார்.
ஓய்வு பெற்றார் மார்ச் 1-ந் தேதி பதவிக் காலத்தை நிறைவு செய்த ஜோஸ் முஜிகா அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி தனது சொந்த மாளிகைக்கு திரும்பியபோது, ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
ஓய்வே கிடையாதே… அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எனது பயணம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. ஒவ்வொரு நாளும் சவக்குழிக்கு வெகு நெருக்கமாக நான் சென்று கொண்டிருக்கிறேன். வயதான ஓய்வூதியதாரராக ஒரு மூலையில் அமர்ந்து எனது பதவிக்கால அனுபவங்களைப் பற்றி புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்க விரும்பவில்லை. எனக்கு அசதியாகதான் உள்ளது. எனினும், நான் ஓய்வெடுக்கப் போவதில்லை என்றுதான் கூறினார்.
ஓய்வூதியதாரர் உருகுவே நாட்டின் சட்டத்தின்படி, இரண்டாவது முறையாக யாரும் அதிபராக முடியாது. இதனால் ஜோஸ் முஜிகா, ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக காலம் கழிக்க இருக்கிறார்….
அதிபர் சார்! உங்கள் மனைவிக்குத் தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்! இந்தக் காலத்தில் எந்த மனைவி இப்படி பதவியில் இருந்தும் ‘ஏழை’ மனைவியாக வாழ்க்கை நடுத்துவார்! வாழ்க! வாழ்க!
இவர் திருமணமான, தென் அமெரிக்க காமராஜர் .