இராக்கின் புராதன நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அழிப்பு

nimrudஇராக்கிலுள்ள புராதன நிம்ருத் நகரை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கனரக இயந்திரங்களைக் கொண்டு தரைமட்டமாக்கியதாக இராக் அரசு வியாழக்கிழமை கூறியது.

சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஐ.எஸ். அமைப்பினால் அழிக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இராக் நாட்டுச் சுற்றுலா, அரும்பொருள் துறை அமைச்சகத்தின் முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளத்தில் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது:

வரலாற்றுச் சிறப்பு மிக்க நிம்ருத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர்.

கனரக வாகனங்களைக் கொண்டு அந்த நகரை அவர்கள் தரைமட்டமாக்கினர் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்தத் தகவலை உறுதிப்படுத்திய மற்றொரு அதிகாரி, “”ஐ.எஸ். அமைப்பினரின் தாக்குதலால் நிம்ருத் நகரம் எந்த அளவுக்குச் சேதமடைந்துள்ளது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை” என்றார்.

இதுகுறித்து நியூயார்க்கிலுள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இராக்கிய தொல்பொருள் நிபுணரான அப்துல் அமீர் ஹம்தானி கூறியதாவது:

நிம்ருத் நகரம் அழிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் அந்தச் செயலில் ஈடுபடுவார்கள் என எல்லோருமே அஞ்சிக் கொண்டுதான் இருந்தோம்.

இராக்கின் பாரம்பரியப் பெருமையை அழிப்பதே அவர்களது திட்டம்.

நிம்ருதையடுத்து, நினேவீ மாகாணத்திலுள்ள 2,000 ஆண்டு பழமை வாய்ந்த ஹாத்ரா அவர்களது இலக்காக இருக்கும் என்றார் அவர்.

அஸ்ஸிரியர்கள் காலத்தில், கி.மு. 13-ஆவது நூற்றாண்டில் நிம்ருத் நகரம் அமைக்கப்பட்டது.

ஐ.எஸ். ஆக்கிரமிப்பில் இருக்கும் மொசூல் நகருக்கு 30 கி.மீ. தூரத்தில், டைக்ரிஸ் நதிக்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.

“இது ஒரு போர்க் குற்றம்’: இராக்கின் வரலாற்றுப் பொக்கிஷமான நிம்ருத் நகரை தரைமட்டமாக்கியிருப்பது ஐ.எஸ். பயங்கரவாதிகள் செய்துள்ள போர்க் குற்றம் என ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

-http://www.dinamani.com