நாங்கள் பிச்சை எடுக்கும் நிலையே உருவாகும்!- யாழ். கடற்றொழில் சம்மேளனத் தலைவர்

minavarஇந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது தொடர்பில் இந்தியாவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாகவும், மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் நாங்கள் அறிகின்றோம். ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் எல்லை தாண்டக்கூடாது என்பதை இறுக்கமாக வலியுறுத்துவோம் என எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

இந்தியா- இலங்கை மீனவர்களுக்கிடையில் எதிர்வரும் 11ம் திகதி ஒழுங்கமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக கேட்டபோதே யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முன்னைய ஆட்சிக்காலத்தில் ராஜித சேனாரத்ன இந்திய மீனவர்கள் எல்லை தாண்டும் விடயத்தில் மிக கரிசனை எடுத்திருந்தார். ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

எனவே இந்த விடயத்தில் நாங்கள் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தப் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாகவும், மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அது எவ்வாறாயினும் பேச்சுவார்த்தை இடம்பெற்றால் நாங்கள் எல்லை தாண்டக் கூடாது என்பதனை வலியுறுத்துவோம். அதனையே நாங்கள் 2010ம் ஆண்டு தொடக்கம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

மேலும் இந்திய கடற்பகுதி மிகவும் பரந்த கடற்பகுதியாகும். எனவே அங்கே உள்ள கடல்வளங்கள் அனைத்தையும் அழித்துவிட்ட பின்னர் இங்கே எமது கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் வருகின்றார்கள். இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் நாங்கள் பிச்சை எடுக்கும் நிலையே உருவாக்கப்படும்.

30 வருடங்கள் நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். அதன் பின்னரும் எமக்கு வாழ்வாதார நெருக்கடியை கொடுக்கக் கூடாது. இப்போது இந்திய அரசியல்வாதிகள் ஒரு சொல்லை பயன்படுத்துகிறார்கள்.

கச்சதீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம் இலங்கை கடற்படை மீனவர்களை பிடித்ததாக. ஆனால் அதில் உன்மையில்லை. இதனை அண்மையில் கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்ற சம்பவமும் உறுதிப்படுத்துகன்றது.

குறிப்பாக அன்றைய தினம், எமது மீனவர்கள் மீது பெற்றோல் குண்டு வீசியிருக்கின்றார்கள். ஈயத்தினால் எறிந்திருக்கிறார்கள், சங்குகளால் எறிந்திருக்கின்றார்கள்.

எனவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் ஒரு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். என அவர் மேலும் தெரிவித்ததுடன், இந்திய பேச்சுவார்த்தைக்குச் செல்வதானால் நாம் அதற்கு முன்னர் ஒரு கோவையினை தயாரிப்போம். அதன் பின்னரே பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாங்கள் எதுவும் பேசமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாண கடற்றொழிலாளர்கள் குறித்து கடற்றொழில் அமைச்சு அக்கறையீன்மை: தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

வடமாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மாகாண கடற்றொழில் அமைச்சும், மத்திய கடற்றொழில் அமைச்சும் அக்கறையற்றிருப்பதனாலேயே கடற்றொழிலாளர்களின் நிலை நாளுக்கு நாள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

மேற்படிக் குற்றச்சாட்டு தொடர்பாக வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் எஸ்.அ ருள்தாஸ் குறிப்பிடுகையில்,

போர் நிறைவடைந்து 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வடமாகாண கடற்றொழிலாளர்களின் நிலை உயர்த்தப்படாத நிலையில் இன்றளவும் பெருமளவான கடற்றொழிலாளர்கள் கடனாளிகளாகவும், வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையினை மாற்றியமைப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அல்லது பிரச்சினைகள் குறித்துப் பேசுவதானால் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் குறித்து மட்டும் பேசிவிட்டு அமைதியாக இருந்து விடுகின்றார்கள்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் எமக்குப் பதிப்பில்லை என குறிப்பிடவில்லை. அதனை விடவும் அதிகளவு பிரச்சினைகளை எங்கள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்கின்றார்கள்.

குறிப்பாக கடற்றொழிலாளர்களுக்கான மானிய விலையில் எரிபொருள் வழங்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதிக்கு எமக்கு தேவையான வலைகளை கொள்வனவு செய்து கொடுப்பதாக கூறப்பட்டு எமது தேவைகளுக்கேற்ப வலைகளின் வகைகள் பதிவு செய்து எடுக்கப்பட்டன.

ஆனால் நாங்கள் தேவை எனக்கேட்ட வலைகள் வேறு. தந்திருக்கும் வலைகள் வேறு. குறிப்பாக சூடைவலை 320கண் வலை, ஆனால் அந்த வலை கேட்டவர்களுக்கு 150கண் வலைககள் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் வழங்கப்பட்ட வலைகளில் இரண்டு வலைகளை பொருத்துவதானால் கூட எங்களுக்கு தேவையான வலை கிடைக்காது. என்பதுடன் இந்த வலைகளை பொருத்துவதற்கு நாங்கள் ஒரு தொகை பணத்தை செலவிடவேண்டும். அதனை விட மேற்படி மானியத்தில் எமக்கு வழங்கப்பட்ட நிதி ஒரு லட்சத்து 15ஆயிரம் ரூபா வரையிலானதாகும். ஆனால் அந்த நிதிக்கு வழங்கப்பட்ட வலைகளின் பெறுமதி மிக குறைந்தது.

எனவே மீதி பணத்திற்கு என்ன நடந்தது? இது ஒரு பிரச்சினை. இதனை விட தென்னிலங்கை மீனவர்கள் சங்கு பிடிப்பதற்கும், அட்டை பிடிப்பதற்கும் வந்திருக்கின்றார்கள். இதனை எவரும் தட்டிக்கேட்பதில்லை. இப்போது நாங்கள் எங்கள் சமாசத்தின் கீழ் உள்ள 14 சங்கங்களுக்கும் அறிவித்திருக்கின்றோம். அவ்வாறான அனுமதிகளை வழங்க வேண்டாம்.

வழங்கினால் அதற்குப் பின்னர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என. இவை மட்டுமல்ல. மீனவர்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள், அடிப்படை தொழில் வசதி பிரச்சினைகள் என பல் வேறு வகையான பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ளுகின்றோம்.

அதற்கெல்லாம் வடமாகாண கடற்றொழில் அடைச்சரோ அல்லது மத்திய கடற்றொழில் அமைச்சரோ, எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் வடமாகாண கடற்றொழில் அமைச்சரை எமக்கு தெரியாது. அமைச்சரை மட்டுமல்ல. முதலமைச்சர், உறுப்பினர்களை கூட தெரியாது. அவர்கள் எங்களிடம் வருவதுமில்லை. எங்களுடைய பிரச்சினைகளை கேட்பதுமில்லை.

இந்த நிலையில் இந்திய மீனவர்களின் வருகை தொடர்பாக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருந்த சமயம் பேசியிருக்கின்றார்கள். ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

இந்திய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் எல்லாம் தீர்க்கப்படும் என ஆனால் தீர்க்கப்பட்டதா? இப்போதும் இந்திய மீனவர்கள் வருகின்றார்கள். இந்தியா- காரைக்கால் பகுதியில் 11கடற்றொழிலாளர்கள் சங்கம் எடுத்த தீர்மானத்திற்கமைய, அந்தப் பகுதி இழுவைப் படகுகள் மட்டும் வருவதில்லை.

மற்றைய பகுதி கடற்றொழிலாளர்கள் வருகிறார்கள். தனியே இழுவைப் படகுகள் மட்டும் வருவதில்லை. தங்கூசி வலை பயன்படுத்துபவர்கள், வருகிறார்கள், டைனமைற் வைத்து மின்பிடிப்பவர்கள் வருகிறார்கள். எனவே இதனையெல்லாம் தீர்த்து வைப்பார்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகையில்,

மாகாண கடற்றொழில் அமைச்சர் இன்றைய தினம் (நேற்று) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வந்திருந்தார். அவரைச் சந்திப்பதற்கு நாங்கள் சென்றிருந்தோம். ஆனால் அவர் எம்மோடு பேச மறுத்ததுடன், தேவை இருப்பின் மன்னாருக்கு வாருங்கள் என கூறியிருக்கின்றார்.

மக்கள் பிரதிநிதிகள் மக்களை தேடிவந்து மக்களின் பிரச்சினைகளை கேட்கவேண்டுமா? அல்லது மக்கள் தங்கள் பிரதிநதிகளை தேடிச் சென்று பிரச்சினைகளைச் சொல்ல வேண்டுமா? இங்கே இந்திய இழுவைப் படகுகள் வந்து கரையோரத்திலிருக்கும் எங்கள் வளங்களை கூட அள்ளிச் செல்கின்றார்கள். கடலுக்குள் நாங்கள் சென்றால் வெறுங் கையோடு திரும்பும்,

நிலையில் இருக்கின்றோம். இதற்கெல்லாம் யார் பொறுப்பாளிகள். இதுபோதாதென்று ஆட்சிமாற்றத்திற்கு முன்னர் இருந்த கடற்றொழில் அமைச்சினால் 74சிங்கள மீனவர்களுக்கு முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தங்கியிருந்து  கடற்றொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அங்கு வந்து நின்று தொழில் செய்தவர்கள் 300ற்கும் மேல்.

அவர்கள் சட்டவிரோதமான தொழில் செய்கின்றார்கள் என நாம் சுட்டிக்காட்டி அவர்களை வெளியேற்றக்கோரினோம். அவர்கள் வெளியேற்றப்படவில்லை.

இந்நிலையில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் வந்த புதிய கடற்றொழில் அமைச்சர் மேலதிகமாக 7சிங்கள மீனவர்களுக்கு புதிய அனுமதி வழங்கியிருக்கின்றார்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளை கேட்பவர்கள் யார்? என இருபகுதி கடற்றொழிலாளர்களும் கடுமையாக குற்றச்சாட்டுக்களையும் கேள்விகளையும் முன்வைத்திருக்கின்றார்கள்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்திருக்கும் வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன்,  வடமாகாண மீன்பிடி அமைச்சின் கீழ் நன்னீர் மீன்பிடி மட்டுமே உள்ளபோதும் ஒரு நல்லெண்ண அடிப்படையில் எமது மக்களுடைய பிரச்சினையாக கருதியே பெருங்கடல் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து நாம் அதிகம் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளதுடன்,

இந்த விடயத்தில் எம்மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை விடவும், எம்மோடு ஒத்துழைத்து பிரச்சினைகளை கூறினால் அது பொருத்தமான செயற்பாடாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன்,

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களை சந்திப்பதற்கு நாம் கொடுத்திருந்த நேரத்தில் அவர்கள் தன்னை  சந்திக்கவில்லை. என கூறியிருக்கும் அமைச்சர் முல்லைத்தீவில் மாற்றுவலுவுள்ளவர்களை சந்திக்கச் சென்ற,  சமயம் தங்களை சந்திக்க கோரியமையாலேயே தாம்  அத்தகை அழைப்பை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: