வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ஒபாமாவை தாம் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று சிறையில் இருந்தபடியே ஐ.எஸ். தீவிரவாதி அளித்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவன் கிறிஸ்டோபர் கார்னல். இவன் ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளன்.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் வகுத்த சதித்திட்டத்தில் கிறிஸ்டோபருக்கும் முக்கிய பங்கு உண்டு.
இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அங்கிருந்தவாறு அவன் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வழியாக ஒரு பேட்டி அளித்துள்ளான்.
அதில், என்னை அமெரிக்க புலனாய்வுத் துறையினர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். அப்படி நான் சிக்காவிட்டால் அமெரிக்கா நாடாளுமன்றம் மற்றும் இஸ்ரேல் தூதரகத்தில் பைப் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருப்பேன்.
அத்துடன் எனது துப்பாக்கியை எடுத்து ஒபாமாவின் தலையில் வைத்து சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டுவிட்டேன் என்றும் கூறியுள்ளான். இந்தப் பேட்டி அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.