ஐ.எஸ்.ஸூக்கு ஆதரவாக 50,000 சுட்டுரைக் கணக்குகள்

isis_leader_001இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதக் குழுவுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் சுட்டுரை (டுவிட்டர்) கணக்குகள் உள்ளன என்று அமெரிக்க ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ஐ.எஸ். தொடர்புடைய சுட்டுரைக் கணக்குகள் குறித்த ஆய்வை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் நடத்தியது. அதிலுள்ள விவரம்:

தற்போது, சுமார் 50 ஆயிரம் சுட்டுரைக் கணக்குகள் ஐ.எஸ்.ஸூக்கு ஆதரவு திரட்டி வருகின்றன.

உலகெங்கும் சுமார் 29 கோடி சுட்டுரைப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிய வரும்பட்சத்தில், குறிப்பிட்ட சுட்டுரைக் கணக்கை டுவிட்டர் நிறுவனம் செயலிழக்கச் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுட்டுரைக் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன. அண்மையில், ஒரே வாரத்தில் சுமார் 2,000 சுட்டுரைக் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் வருவது வாடிக்கையாகி வருகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அந்த ஆய்வுக்கு டுவிட்டர் நிறுவனம் ஒத்துழைப்பு தரவில்லை. ஆனால் அதே சமயம், ரத்து செய்யப்பட்ட சுட்டுரைக் கணக்குகளின் எண்ணிக்கையை அந்த ஆய்வு குறைத்து மதிப்பிட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்தது.

-http://www.dinamani.com