உள்ளக விசாரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பு

suresh-10இலங்கையின் இறுதிகட்ட போர் தொடர்பிலான எந்த உள்நாட்டு விசாரணையும் ஏற்புடையதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டிலேயே காத்திரமான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஜனாதிபதியின் இந்தக் கருத்தை தாமும்,தமிழ் மக்களும் ஏற்கவில்லை என்றும், உள்ளக விசாரணையின் மூலம் தமிழருக்கு நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இல்லை என்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சகல சிங்கள அரசாங்கமும் தலைவர்களும் வெளிநாட்டு விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெளிவாகக் கூறியுள்ளது,

மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டிலிருந்து நழுவப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை எனவும் அவர் கூறுகிறார்.

ஐ நா மட்டுமல்ல எந்தவொரு நாடு அல்லது அமைப்பின் ஒத்துழைப்புடனான உள்ளக விசாரணை என்பது தமிழ் மக்களை ஏளனப்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கப்படும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அப்படியான விசாரணைகள் மூலம் ஒருபோதும் உண்மை வெளிவராது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் அவர் கூறுகிறார்.

உள்நாட்டு விசாரணை என்பது காலத்தை விரயமாக்கும் ஒரு செயலே என்றும், தேர்தல் அரசியலை மையப்படுத்தியே சிங்களத் தலைவர்கள் நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

ஆனால் ஐ நா உட்பட சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் நம்பிக்கையளிக்கும் வகையில், நேர்மையாகவும் விரைவாகவும் உள்நாட்டில் விசாரணை நடைபெறும் என பிபிசியிடம் கூறினார் இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

-http://www.tamilwin.com

TAGS: