இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குக் கூடுதல் ராணுவ அதிகாரம் அளிக்குமாறு, அந்த நாட்டு நாடாளுமன்றத்திடம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி புதன்கிழமை கோரினார்.
வெளிவிவகாரங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரிடையே பேசுகையில் அவர் கூறியதாவது:
நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால்தான் அமெரிக்காவின் வலிமை உச்சத்தை அடையும்.
அமெரிக்காவுக்கு எதிராகச் சவால்விடும் கொலைகாரர்களும், மூர்க்கர்களும் அடங்கிய ஒரு கூட்டம் (ஐ.எஸ்.) தனது லட்சியத்தை அடைய நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தங்களுக்கு எதிரான கருத்துகளையுடையவர்கள் சாக வேண்டும், அல்லது தங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் பயங்கரவாதச் செயல்களைப் பரவச் செய்வதே அவர்களது நோக்கம்.
அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் ஒபாமாவுக்கு முழு அதிகாரம் அளிக்கும் மசோதாவை எம்.பி.க்கள் ஆதரிக்க வேண்டும்.
ஐ.எஸ். மீது தாக்குதல் தொடுக்க அதிபருக்கு ஏற்கெனவே சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.
எனினும், அந்த அதிகாரத்தை குழப்பமற்றதாக ஆக்க புதிய மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றார் ஜான் கெர்ரி.
-http://www.dinamani.com