இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்ச்சிகரமாகச் செயற்படுகின்ற தமிழக மக்கள், அவதானத்துடன் செயற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரச்சினை பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், அங்கு என்ன நடக்கின்றது, என்பதைக் கவனத்திற் கொண்டு, ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் தங்களுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கின்றார்.
சில நேரங்களில், உணர்ச்சிகள் – நாங்கள் விரும்புகின்ற முடிவைப் பெற்றுத் தராது. அதுவே பல சமயம் எதிர்மறையான விளைவயும் ஏற்படுத்திவிடக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடமாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயம் குறித்த, இந்திய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த விக்னேஸ்வரன், “இதுவரை காலமும் வட இந்தியார்களுக்கு, இலங்கையின் வட பகுதியின் கஸ்டமான நிலைமைகள் குறித்து, பெரிய அளவில் கரிசனை கிடையாது என்ற கருத்துத் தோற்றமே இங்கு நிலவியது. ஆனால் இந்தியப் பிரதமர் இங்கு நேரடியாக வந்து நிலமைகளை கண்டு, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எனும் உறுதியை அளித்திருப்பது, எமக்குப் பெரிய ஆறுதலை அளித்துள்ளது. அவர் வருகைக்கு முன்னர் இருந்ததை விட, மோடி அவர்கள் இங்கு வந்து சென்றதன் பின்னர், இந்தியாவிடம் எங்களின் நம்பிக்கை கூடியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றசாட்டுக்கள் பற்றிய விசாரணைகள், மீள்குடியேற்றம், நல்லிணக்கம் போன்ற விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளது பற்றி பதிலளித்த அவர், “பொறுமை என்பது அவசியம் ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் முடியவில்லை. அதேவேளை அழுத்தம் கொடுத்தால் மட்டுமே இலங்கை அரசாங்கம் சிறூபான்மையினருடைய சில விஷயங்களையாவது செய்யும் என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம்.
கடந்த 67 ஆண்டுகளாக இந்த நாட்டில் சிறுபான்மையினர் பொறுமையாகக் காத்திருந்தனர். எனவே நன்மைகள் ஏற்படுமாக இருந்தால், இன்னும் சில மாதங்கள் காத்திருப்பதில் தவறில்லை.” என கூறியுள்ளார்.
-http://www.tamilwin.com