பாகிஸ்தான் தேவாலயத் தாக்குதல்: நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

  • தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பாகிஸ்தானின் கராச்சி நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

    தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பாகிஸ்தானின் கராச்சி நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் கண்டித்து,  நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானின் கலாசாரத் தலைநகரம் என்றறியப்படும் லாகூரில், கிறிஸ்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்து வரும் யோஹானாபாத் பகுதியில், இரு தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்ந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர்.

இதைக் கண்டித்து திங்கள்கிழமை நாடு முழுவதும் கிறிஸ்தவ சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சுமார் பத்து லட்சம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் யோஹானாபாத் பகுதியில், பெண்கள் வீதிகளில் அமர்ந்து உயிரிழந்தவர்களின் நினைவாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

லாகூர், ஃபைஸலாபாத், சர்கோதா, குஜ்ரன்வாலா ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய சாலை மறியலால், அந்நகரங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஃபைஸலாபாதில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் நடு வீதியில் டயர்கள் உள்ளிட்டவற்றுக்குத் தீ வைத்தனர். இதனால் நகரம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சில இடங்களில் வாகனங்களுக்கு எதிராக கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. லாகூர் தேவாலயங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்குப் பல்வேறு இடங்களில் அஞ்சலிக் கூட்டங்களும் நடைபெற்றன. இதில் மாணவர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

17 பேர் கைது: தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான ஜமாத்-உல்-அஹ்ரார் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

தேவாலயத் தாக்குதல் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லாகூர் காவல் துறை செய்தித் தொடர்பாளர் நியப் ஹைதர் கூறினார்.

பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட இரண்டு நபர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த இருவரைப் பொதுமக்கள் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் இருவரும், குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்களின் கூட்டாளிகள் என்று தெரிய வந்தது.

 தற்கொலைத் தாக்குதலைப் பார்வையிட வந்ததாக அவ்விருவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, அங்கு கூடியிருந்த பெரும் கும்பல் அவ்விருவரையும் கடுமையாகத் தாக்கியது. பின்னர், இருவரையும் உயிருடன் அந்தக் கும்பல் எரித்தது. இருவர் உடல்களும் அடையாளம் தெரியாமல் கருகின.

-http://www.dinamani.com