இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவு மறுபரிசீலனை: அமெரிக்கா

israelஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு விவகாரங்களில் இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை மறு பரிசீலனை செய்யப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு எதிராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலில் தீவிர தேசியவாதிகளின் ஆதரவைப் பெறுவதற்காக அவர் அவ்வாறு பிரசாரத்தில் ஈடுபட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் எதிர்பாராத வகையில் பெரும் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலின் நிலைப்பாடு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு விவகாரங்களில் இஸ்ரேலுக்கு தொடர்ந்து அளித்து வந்துள்ள ஆதரவை மறு பரிசீலனை செய்யப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இஸ்ரேல் -பாலஸ்தீனம் என்கிற “இரு நாடுகள்’ சித்தாந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா செயல்பட்டு வந்துள்ளது. இஸ்ரேல் இந்த சிந்தனையைக் கைவிட்டதாகக் கூறும்பட்சத்தில் அந்த நாட்டுக்கு அளித்து வரும் ஆதரவை அமெரிக்கா மறு பரிசீலனை செய்யும் என்றார்.

இந்நிலையில், பாலஸ்தீன நாடு அமைப்பதற்கான சரியான நேரம் வரவில்லை என்ற தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதாக ஜெருசலேமில் நெதன்யாஹு கருத்து தெரிவித்தார்.

நீடித்த அமைதியுள்ள இரு நாடுகள் அமைய வேண்டுமானால், சூழல் மாற வேண்டும் என்றார் அவர்.

நெதன்யாஹுவுக்கு ஒபாமா வாழ்த்து: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாஹு வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார்.

தொலைபேசியில் நெதன்யாஹுவைத் தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளை ஒபாமா தெரிவித்தார்.

-http://www.dinamani.com