இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்திய தாக்குதல்களில் 70 அரசுப் படையினரும், 45 குர்துகளும் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைக் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் ரமி அப்தெல் ரகுமான் கூறியதாவது:
சிரியாவின் ஹஸாகே நகரில் குர்துகளின் புத்தாண்டான “நெளருஸ்’ கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
அப்போது அருகருகே இரண்டு வெடிகுண்டுகள், அடுத்தடுத்து வெடித்ததில் 45 பேர் பலியாகினர்.
இந்த இரு குண்டு வெடிப்புகளில் ஒன்று, தற்கொலைத் தாக்குதல் எனக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காவிட்டாலும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புதான் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கும் என்றார் அவர்.
இந்தச் சூழலில், குர்துகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹஸாகே நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.
இதனால், குர்துப் படையினருக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஆங்காங்கே சண்டை நடந்து வருகிறது.
பான் கி-மூன் கண்டனம்: ஹஸாகே நகரில் 45 குர்துகளை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “”குர்துகளின் மீதான இந்த கொடூரத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றார்.
குர்துப் படையினரின் தளபதி ஜோன் இப்ராஹிம் கூறுகையில், “”ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்தச் செயலுக்குப் பழிவாங்காமல் விட மாட்டோம்” என்று சூளுரைத்தார்.
அரசுப் படையினர் 70 பேர் சாவு: முன்னதாக, சிரியா அரசுப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள ஹாம்ஸ், ஹமா ஆகிய மாகாணங்களில் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர்.
ராணுவ நிலைகள் மீது அவர்கள் நிகழ்த்திய இந்தத் தாக்குதலில் அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவான படையைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. இந்தத் தாக்குதல்கள் குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் அப்தெல் ரெஹ்மான் கூறியதாவது: அண்மைக் காலமாக அலெப்போ, ரக்கா ஆகிய மாகாணங்களில் அரசுப் படையினரிடமும், ஹஸாகேவில் குர்துப் படையினரிடமும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தத் தோல்விகளை சமன் செய்யும் விதமாகவே அரசுப் படையினர் மீதும், குர்துகள் மீதும் அவர்கள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர் என்றார் அவர்.
-http://www.dinamani.com