உலகில் தண்ணீரின் பயன்பாடு தற்போதைய அளவிலேயே தொடருமானால், 2050-ஆம் ஆண்டு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று ஓர் ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.
கடந்த சில நூற்றாண்டுகளாக தண்ணீரின் பயன்பாடு, மக்கள்தொகைப் பெருக்கம் ஆகியவற்றைக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது குறித்து தெரிய வந்துள்ளது.
இந்த நூற்றாண்டின் மத்தியில், உலகில் இருக்கக் கூடிய நீரின் அளவைவிட, தேவை மிகக் கூடுதலாக இருக்கும்.
புதிய தொழில்நுட்பங்கள், விழிப்புணர்வு காரணமாக, 1980-ஆம் ஆண்டு முதல் நீரின் பயன்பாடு குறைந்துள்ளது என்பது உண்மை. அதே சமயத்தில், தேவையான நீரை உற்பத்தி செய்வதும் தேக்கம் அடைந்துள்ளது.
தற்போதைய நீர் பயன்பாட்டு அளவையும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தையும் வைத்து நடத்திய ஆய்வில், 2050-ஆம் ஆண்டு வாக்கில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறலாம்.
தற்போது உலக மக்கள்தொகை சுமார் 700 கோடியாகும். 2050-ஆம் ஆண்டில் இது 960 கோடியாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்தல், கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுப்பதில் புதிய தொழில்நுட்பம் உருவாதல் ஆகியவைதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
அமெரிக்காவின் “வைலி இன்டர்டிஸிப்ளினரி ரிவ்யூஸ்’ என்ற ஆய்வேடு இதனை வெளியிட்டுள்ளது.
-http://www.dinamani.com