ஆப்கானிஸ்தானில் பேருந்துப் பயணிகள் 13 பேரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர்.
தலைநகர் காபூலுக்கு அருகே உள்ள வர்தக் மாகாணத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம், ஆப்கன் பாதுகாப்பு நிலையைக் குறித்து கேள்விக் குறியை எழுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வர்தக் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அடாவுல்லா கோக்யானி கூறியதாவது:
காந்தஹார் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து மீது நள்ளிரவு 1 மணியளவில் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
அதில் ஒரு பெண் உள்பட 13 பேர் உயிரிழந்தனர் என்றார்.
எனினும் அருகிலுள்ள கஜினி மாகாணத்தின் துணை ஆளுநர் கூறுகையில், பேருந்திலிருந்து பயணிகளைக் கீழே இறக்கி, அவர்களை ஒவ்வொருவராக பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாகக் கூறினார்.
கடந்த மாதம், பேருந்தில் சென்று கொண்டிருந்த 30 ஷியா பிரிவினரை ஸாபூல் மாகாணத்தில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அவர்களது கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.
-http://www.dinamani.com/