கென்யா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 147 மாணவர்கள் பலி

  • கென்யாவில் பல்கலைக்கழக வளாகத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலையடுத்து, கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியே ஓடிவரும் மாணவர்கள்.

    கென்யாவில் பல்கலைக்கழக வளாகத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலையடுத்து, கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியே ஓடிவரும் மாணவர்கள்.

  • பல்கலைக்கழக வளாகத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட ராணுவத்தினர்.

    பல்கலைக்கழக வளாகத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட ராணுவத்தினர்.

கென்யாவில் பல்கலைக்கழக வளாகத்தில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர்.

கென்யாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காரிஸா நகர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த பயங்கரவாதிகள், சரமாரியாகச் சுட்டனர். பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலில் பலர் காயமடைந்ததாக அங்கிருந்து தப்பிய மாணவர்கள் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தாலும், மாணவர் விடுதியில் ஏராளமானோரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகச் சிறை பிடித்து வைத்தனர். சோமாலியாவைச் சேர்ந்த அமைப்பான அல்-ஷபாப், கிறிஸ்தவர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக அங்கிருந்து தப்பிய மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 79 பேர் காயமடைந்ததாகவும் கென்யா உள்துறை அமைச்சர் ஜோசஃப் என்கேசரி தெரிவித்தார்.

பலத்த காயமடைந்த பலர் நைரோபி நகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே, பாதுகாப்புப் படையினர் 16 மணி நேரத்துக்குக்கும் மேல் நடத்திய தொடர் தாக்குதலில் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதன்மூலம் இத்தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அமைச்சர் ஜோசஃப் தெரிவித்தார்.

அல்-ஷபாப் பொறுப்பேற்பு: இதற்கிடையே, அல்-ஷபாப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது ரகே, அந்த அமைப்புக்குச் சொந்தமான வானொலியில் கூறுகையில், “”எங்கள் அமைப்பைச் சேர்ந்த “வீரர்’கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்” என்றார்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் அமெரிக்கத் தூதரகத்தில் கடந்த 1998ஆம் ஆண்டு அல்-காய்தா நடத்திய தாக்குதலில் 224 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு மோசமான பயங்கரவாதத் தாக்குதல் தற்போது காரிஸா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com