இலங்கையில் தொழிற்சாலைகள் அமைப்போம்!- அழைக்கிறார் தமிழ்நாடு ஈஸ்வரன்

p26aஇலங்கையில் தொழில் தொடங்க தமிழகத் தொழில் அதிபர்கள் தயாராகி வருகிறார்கள். இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இதில் ஆர்வம் காட்டிவருகிறாராம்.

 அந்தவகையில், பி.ஜே.பியுடன் தமிழகத்தில் கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் 19 பேர் கொண்ட குழுவினர், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பகுதிக்குச் சென்று ‘என்னென்ன புதிய வேலை வாய்ப்புகளைத் தொடங்கலாம்?’ என்று ஆய்வு செய்து திரும்பியிருக்கிறார்கள்.

இந்தக் குழுவில் திருப்பூர் கார்மென்ட்ஸ் தொழிலதிபர்கள், கரூரில் உள்ள பிரபல பஸ் பாடி கட்டும் உரிமையாளர், கொசுவலை தயாரிக்கும் கம்பெனியின் உரிமையாளர், ஈரோடு பெரு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்டவர்கள் சென்றிருக்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை தொழில் செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், இலங்கைக்குத் தாராளமாகப் போகலாம். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இருகரம் நீட்டி அழைக்கிறார்.

மீன்பிடித் தொழில், விவசாயம் மட்டுமே போதாது. புதிய புதிய தொழில்கள் மூலம் பொருளாதார ரீதியாக தற்போது சிரமப்படும் தமிழ் மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.

இலங்கையில் நடந்த படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், ஆதரவற்ற விதவைகள் மறுவாழ்வு பெறவேண்டும்.

அதற்கு தமிழகப் பகுதியில் தொழில் வேலைவாய்ப்பு பெருகுவதோடு, மக்களுக்கு சம உரிமை பெற வழிவகை செய்யவேண்டும்” என்று சொல்லும் கொ.ம.தே கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வி வருமாறு!

உங்கள் குழுவினரைச் சந்தித்த தமிழ் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

நான் போகவில்லை. எனது குழுவினர்தான் இலங்கை சென்றனர். அங்குள்ள தமிழர்கள் எங்கள் குழுவிடம், ‘தமிழக அரசியல்வாதிகள் எங்கள் நாட்டைப் பற்றி வீணாக விமர்சனம் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள். அவர்கள் அங்கே பேசினால் எங்களுக்கு இங்கே அடி விழுகிறது. மேடையில் பேசுவதை விட்டுவிட்டு, இங்கே… தொழில் வாய்ப்புகளைத் தர முன்வந்தால், நாங்கள் உழைத்துப் பிழைத்துக்கொள்வோம்’ என்றார்கள்.

அவர்கள் சொல்வது சரிதான். இங்கேயிருக்கும் சிலர் அங்குள்ள சூழ்நிலை தெரியாமல் திட்டித் தீர்க்கிறார்கள். அதை இத்துடன் நிறுத்திக்கொண்டு தொழில் ரீதியாக இலங்கைத் தமிழர்களுக்கு உதவவேண்டும்.

உதாரணத்துக்கு, கிளிநொச்சியில் வட இந்திய தொழில் அதிபர் ஒருவர், கார்மென்ட்ஸ் தொழிற்சாலையை ஆறு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தார். 2 ஆயிரம் தமிழர்கள் அங்கே வேலை பார்க்கிறார்கள். ‘வடநாட்டுக்காரருக்கு தோன்றியது ஏன் நம் ஊர் தொழில் அதிபர்களுக்குத் தோன்றவில்லை’ என்பதுதான் புரியவில்லை.

கொங்கு மண்டல தொழில் அதிபர்கள் அங்கே தொழில் தொடங்கத் தயாராக இருக்கிறார்களா?

இங்கே 5 ஆயிரம் பேர்களுக்கு வேலை தரும் ஒரு தொழில் அதிபர், இலங்கையில் 200 பேருக்கு வேலை தரும் தொழிற்சாலையைத் தொடங்க முடியும்.

இப்படி எங்கள் கட்சியில் உள்ள தொழில் அதிபர்களால் வரும் காலங்களில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு நிச்சயமாக வேலை தரமுடியும். இலங்கையில் விரைவில் பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அதன் முடிவுக்குப் பிறகு, எங்கள் குழு அங்கே போய் தொழிற்சாலைகளைத் தொடங்கும்.

இலங்கையில் மத்தியில் உள்ள ஆட்சிக்கும் மாகாண ஆட்சிக்கும் சுமுகமான உறவு இருந்தால்தானே… நீங்கள் பாதுகாப்பான சூழலில் தொழில் தொடங்க முடியும். அப்படி ஒரு சூழ்நிலை தற்போது நிலவுகிறதா?

நம் பிரதமர் மோடி சென்றுவிட்டு வந்த பிறகு, அங்கே நிலைமை மாறிவிட்டது. ஒன்றுபட்டுச் செயல்படத் தயாராக இருக்கிறார்கள். முதல்வர் விக்னேஸ்வரன் என்னுடன் போனில் பேசினார். அப்போது நான் பொள்ளாச்சியில் இருந்தேன். தென்னை விவசாயம் பற்றி விரிவாகப் பேசினார். நிச்சயமாக, பேச்சுடன் இது நிற்காது. நடைமுறையில் செய்துகாட்டுவோம்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் ராணுவ முகாம்கள் இன்னமும் விலக்கப்படவில்லையே? விடுதலைப்புலிகள் அமைப்பினர் சர்வதேச அளவில் மீண்டும் உயிர்பெற்று வருவதாக இலங்கை அரசு சந்தேகத்தைக் கிளப்புகிறதே?

இலங்கையில் புதிய தொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை நாம் கொடுத்து, இந்திய அரசு மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து சம உரிமை கிடைக்க வைக்கலாம். அப்படி நடந்தால், இலங்கையில் உள்ள இளைஞர்கள் வெளிநாடு செல்லமாட்டார்கள். அதேபோல, வெளிநாட்டில் உள்ள இளைஞர்கள் இலங்கைக்கே திரும்பிவிடுவார்கள்.

இப்படிப்பட்ட நல்ல சூழ்நிலை உருவாகும்போது, விடுதலைப்புலிகள் இயக்கம் உயிர்பெறும் என்கிற சந்தேகம் எங்கே வரப்போகிறது? தற்போது தமிழர்கள் பகுதிகளில் உள்ள இராணுவத்தை இனியும் தொடர்ந்து நிறுத்தவேண்டிய அவசியமும் ஏற்படாது.

-http://www.tamilwin.com

TAGS: