ஐ.எஸ்.ஸில் சேர முயன்றவர்களில் பிரிட்டன் அரசியல்வாதி மகன்

isis_irakதுருக்கி வழியாக சிரியாவுக்குள் நுழைய முயன்று, புதன்கிழமை பிடிபட்ட 9 பிரிட்டிஷாரில் ஒருவர் பிரிட்டன் உள்ளாட்சி மன்ற உறுப்பினரின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவுக்குச் செல்ல முயன்ற 3 ஆண்கள், 2 பெண்கள், ஒன்று முதல் 11 வயது வரையிலான நான்கு சிறுவர்கள் துருக்கியில் கடந்த புதன்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் மீண்டும் பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காக அவர்கள் சிரியா செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த 9 பேரில் ஒருவர், பிரிட்டனின் ராச்டேல் நகர உள்ளாட்சிமன்ற உறுப்பினர் ஷகீல் அகமதுவின் மகன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “”என் மகன் பர்மிங்ஹம் பல்கலைக்கழகத்தில் இருக்கிறான் என்று நினைத்திருந்தேன். அவன் துருக்கி சென்றிருக்கிறான் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்” என்றார்.

பிரிட்டனிலிருந்து ஏராளமான இளைஞர்கள் சிரியாவுக்கு செல்ல முயன்று, தாயகம் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும், கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி 3 பள்ளி மாணவிகள் சிரியாவுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

-http://www.dinamani.com