வடக்கு குடும்ப தலைவிகளின் கண்ணீர் துடைக்க ரணிலின் தேசிய நிலையம்

sad_woman_001வடக்கில் குடும்ப தலைமைகளை கொண்ட பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தேசிய நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கணவன்மாரை இழந்த, குடும்ப தலைமைகளை கொண்ட பெண்களின் கோரிக்கைகளை ஏற்றே இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் காரியாலயம் இன்று அறிவித்துள்ளது.

வடக்கில் சுமார் 50ஆயிரம் குடும்பங்கள், பெண்களை தலைமைகளாக கொண்டுள்ளன. இந்தக்குடும்பங்கள் கல்வி மற்றும் ஏனைய வாழ்க்கையை கொண்டு செல்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.

இந்தக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 35ஆயிரம் ரூபா கடன் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு போதுமானதாக அமையவில்லை.

இந்தநிலையில் குறித்த கடன்களை வழங்குவதில் வங்கிகளும் தாமதப்போக்கை காட்டிவருகின்றன.

சமூகத்தில் சட்டவிரோத மதுபான பாவனை, பாலியல் வன்முறைகள், என்பன பெண்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளாக உள்ளன.

இந்தநிலையில் தமக்கு எதிரான பிரச்சினைகளை முறையிட போதுமான பெண் காவல்துறை அதிகாரிகள் இல்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் தாமதங்கள் உள்ளன.

எனவே பெண்களுக்கான தேசிய நிலையத்தை அமைப்பதன்மூலம் பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டலாம் என்று பிரதமர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்த அறிக்கையை தொடர்ந்து பெண்களுக்கான முன்னேற்றங்களுக்கான பரிந்துரைகளுக்காக சட்டத்தரணி சாந்தினி அபிமன்யசிங்கத்தை தலைமையாக கொண்ட குழு ஒன்றை பிரதமர் அமைத்திருந்தார்.

இந்தநிலையில் பெண்களுக்கான புதிய நிலையத்தின் நடவடிக்கைகளை மகளிர் விவகார அமைச்சும் கொள்கை திட்டமிடல் அமைச்சும் இணைந்து செயற்படுத்தவுள்ளன.

-http://www.tamilwin.com

TAGS: