நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து சண்டையிட்டு வருவதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களோடு சேர்ந்து சண்டையிட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் செல்கின்றனர். தற்போது லிபியாவுக்கும் வெளிநாட்டுப் போராளிகள் செல்வது தெரிய வந்துள்ளது.
இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) , அல்-காய்தா உள்ளிட்ட பல பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து சண்டையிடச் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான கால அளவில், இதுபோன்ற வெளிநாட்டுப் போராளிகளின் எண்ணிக்கை 71% அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
நூறுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் போராளிகள் இராக், சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, யேமன், லிபியா ஆகிய நாடுகளில் பயங்கரவாதிகளுடன் இணைந்து சண்டைபுரிந்து வருகின்றனர்.
சிரியா, இராக்கில் அதிகபட்சமாக வெளிநாட்டுப் போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். ஆப்கனில் சுமார் 6,500 வெளிநாட்டுப் போராளிகள் உள்ளனர்.
அதிகபட்சமாக ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலிருந்து போராளிகள் செல்கின்றனர். டுனீசியா, மொரோக்கோ, பிரான்ஸ், மாலத்தீவு, ஃபின்லாந்து, பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து சண்டையிடச் சென்றுள்ளனர்.
இது சர்வதேசப் பாதுகாப்புப் பிரச்னையாக மாறி வருகிறது என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
-http://www.dinamani.com