இஸ்லாமாபாத்: ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த, 11 இந்தியர்கள், 35 வெளிநாட்டினர் உட்பட, 183 பேரை பாக்., கடற்படை கப்பல், பத்திரமாக மீட்டு வந்துள்ளது.
போர் மேகம் சூழ்ந்துள்ள, ஏமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்கும் பணியில், உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் கடற்படையை சேர்ந்த வீரர்கள், அங்குள்ள இந்தியர்களை, விமானம் மற்றும் கப்பல் மூலம், மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களில், நூற்றுக்கணக்கான இந்தியர்கள், தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஏமனில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை மீட்கும் நடவடிக்கையில், அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, பாகிஸ்தானிலிருந்து ஏமனின் மொகல்லா நகருக்கு, அந்நாட்டு கடற்படையை சேர்ந்த கப்பல், அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மொகல்லா நகரை அடைந்த இந்த கப்பல், 11 இந்தியர்கள், 35 வெளிநாட்டினர் உட்பட மொத்தம், 183 பேரை மீட்டது.
விரைவில் அவர்கள் அனைவரும், இஸ்லாமாபாத்திலிருந்து தங்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
-http://www.dinamalar.com