யேமன் மீது சவூதி அரேபியா கடல்வழித் தாக்குதல்: சண்டையில் 18 பேர் பலி

yemenசவுதி தலைமையிலான கூட்டுப் படைப் போர்க் கப்பல்கள், யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நிகழ்த்தின.

ஏடன் நகரிலுள்ள முவல்லா என்ற துறைமுகத்தைக் கைப்பற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சியை, இந்தத் தாக்குதல் உதவியுடன் அதிபர் அபெத் ரப்போ மன்சூர் ஹாதிக்கு ஆதரவுப் படையினர் முறியடித்தனர்.

இந்தச் சண்டையில் அதிபர் ஆதரவுப் படையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 6 பேர் உயிரிழந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சண்டை குறித்து அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது:

ஏடன் நகரைச் சுற்றிலும் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது கரைக்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ள சவூதி தலைமையிலான கூட்டுப் படைப் போர்க் கப்பல்கள் குண்டுகளை வீசின.

முவல்லா துறைமுகத்தைக் கைப்பற்ற கடந்த சில நாள்களாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

முவல்லா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் அதிகக் கவனம் செலுத்தியதால் அங்கு அவர்களது முன்னேற்றத்தைத் தடுக்க அதிபர் ஆதரவுப் படையினர் திணறி வந்தனர்.

இந்தச் சூழலில் சவூதி கூட்டுப் படையினரின் கடல்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

அதன் உதவியுடன் முவல்லா பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்களை அதிபர் ஆதரவுப் படையினர் விரட்டியடித்தனர் என்று அவர்கள் கூறினர்.

இந்தப் பகுதியில் நடைபெற்ற சண்டையில், முந்தைய 24 நேரத்தில் மட்டும் 53 பேர் உயிரிழந்ததாக மருத்து அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

இதற்கிடையே, யேமனின் தெற்குப் பகுதியில், அபியான் எனும் மாகாணத்தில் அதிபர் ஆதரவுப் படையைச் சேர்ந்த 8 பேரை ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றதாக அந்த மாகாண ஆளுநர் அல்-காதர் அல்-சயீதி தெரிவித்தார்.

ஏடனில் கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டு வரும் அதிபர் ஆதரவுப் படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக அபியான் பகுதியைச் சேர்ந்த அதிபர் ஆதரவுப் பழங்குடியினர் சென்று கொண்டிருந்தபோது அவர்களை கிளர்ச்சியாளர்கள் தாக்கியதாக அவர் தெரிவித்தார்.

முந்தைய நாள் இரவு முழுவதும், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள லாஜ் மாகாணத்தின் அல்-அனாத் நகரில் சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் விமானம் முலம் குண்டுமழை பொழிந்ததாக அதிபர் ஆதரவுப் படைத் தளபதி முத்தென்னா ஜவாஸ் கூறினார்.

540 பேர் சாவு: உலக சுகாதார அமைப்பு

யேமனில் நடைபெற்று வரும் சண்டையில், கடந்த சில வாரங்களில் மட்டும் 540 பேர் உயிரிழந்ததாகவும், 1,700 பேர் காயமடைந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகளைப் பொருத்தவரை, கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் 74 குழந்தைகள் பலியானதாகவும், 14 குழந்தைகள் காயமடைந்ததாகவும் யூனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிபர் ஆதரவுப் படையினர், கிளர்ச்சியாளர்களிடையிலான தீவிர சண்டை, சவூதி அரேபியக் கூட்டுப் படையினரின் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றுக்கு இடையே சிக்கியுள்ள பொதுமக்களின் நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் உள்ளதாக அங்கு செயல்படும் தன்னார்வ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

-http://www.dinamani.com