ஒரே நிமிடத்தில் “சார்ஜ்’ ஆகும் பேட்டரி!

செல்லிடப்பேசிகளில் (செல்போன்கள்) ஒரே நிமிடத்தில் முழுமையாக மின்னூட்டம் செய்துகொள்ளும் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்.

அந்த நாட்டின் ஸ்டேன்ஃபர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த அலுமினியம் பேட்டரியை வடிவமைத்துள்ளனர்.

தீப்பிடிக்கக் கூடிய லித்தியம் பேட்டரிகளைப் போலன்றி, இவை பாதுகாப்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்டேன்ஃபர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹோங்ஜீ டயி கூறியதாவது:

தற்போது செல்லிடப்பேசி, மடிகணினி உள்ளிட்ட சாதனங்களில் அல்கலைன், லித்தியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் அல்கலைன் பேட்டரிகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை.

லித்தியம் பேட்டரிகள் அவ்வப்போது வெடித்து தீவிபத்துகள் ஏற்படுகின்றன.

இந்தப் பேட்டரிகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய அலுமினியம் பேட்டரிகளை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.

அவை தீப்பிடிப்பதில்லை. அலுமினியத்தின் விலை மிகவும் குறைவு என்பதால், இந்த பேட்டரிகள் மலிவானவை.

மேலும், மின்சாரத்தைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மையும் அலுமினியத்துக்கு அதிகம்.

பேட்டரிகள் சிறப்பாகச் செயல்பட, அதில் பயன்படுத்தப்படும் இரு மின்முனைகளையும் (அனோடு, கேத்தோடு) வெவ்வேறு பொருள்களைக் கொண்டு உருவாக்கி விஞ்ஞானிகள் பரிசோதித்து வந்தனர்.

எனினும், மிக எளிமையான அலுமினியம் நேர்மின் முனைக்கும் (அனோடு), “கிராஃபைட்’ என்ற பொருள் எதிர்மின் முனைக்கும் (கேத்தோடு) மிகவும் ஏற்றவை என்பதை தற்செயலாகக் கண்டறிந்தோம்.

பொதுவாக செல்லிடப்பேசியின் பேட்டரிகளை மின்னூட்டம் (சார்ஜ்) செய்வதற்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் உருவாக்கியுள்ள பேட்டரி இதுவரை இல்லாத வேகத்தில் மின்னூட்டம் பெறுகிறது.

ஆய்வகத்தில் நாங்கள் உருவாக்கிய அலுமினியம் பேட்டரி, ஒரே நிமிடத்தில் முழுமையான மின்னூட்டம் பெற்றது என்றார் அவர்.

-http://www.dinamani.com