பீஜிங், சீன நாட்டு சிறைகளில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் உடலுறுப்புகள் மயக்க மருந்து செலுத்தாமலேயே துடிக்க, துடிக்க அறுவடை செய்யப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன.
ஆண்டுதோறும் இவ்வகையில் சுமார் 11 ஆயிரம் கைதிகளின் உடல்களில் இருந்து ஈரல், சிறுநீரகம், கண் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் அகற்றப்பட்டு மாற்று உறுப்புகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்தப்படுவதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 135 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் உடலுறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு 0.1 சதவீதம் அளவு கூட வளரவில்லை. மாற்று உறுப்புகள் வேண்டி கோடிக்கணக்கான நோயாளிகள் காத்திருக்க, நாடு முழுவதும் வெறும் 37 பேர் மட்டுமே தங்களது உடலுறுப்புகளை தானம் செய்யும் தன்னார்வலர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இதனால், அங்கு மாற்று அறுவை சிகிச்சைக்கு உடலுறுப்புகள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்க சீன நாட்டு சிறைகளில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் உடலுறுப்புகள் மயக்க மருந்து செலுத்தாமலேயே துடிக்க, துடிக்க அறுவடை செய்யப்படுவதாக ஒரு ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 2 ஆயிரம் கைதிகளின் கண்களை தானே அகற்றியதாக ஒரு டாக்டர் பெருமையுடன் பேட்டியளித்துள்ளார்.
இதுபோன்ற பலவந்த ஆபரேஷனுக்கு பிறகு அந்த கைதிகள் சிறைகளின் கடைக்கோடி பகுதியில் உள்ள சமையல் அறை மற்றும் கொதிகலன் அறைகளில் பணி நிமித்தமாக மாற்றப்பட்டு, வெளியுலகின் கண்களில் இருந்து மறைக்கப்படுவதாகவும் அந்த ஆவணப்படம் குறிப்பிடுகின்றது.
பொதுவாக, அரசியல் கைதிகளில் பலுன்காங் இனத்தை சேர்ந்த கைதிகள் இவ்வகை கொடுமைக்கு அதிகமாக உள்ளாக்கப்படுகிறார்கள். இவர்களில் தீராத வியாதியஸ்தர்கள், மற்றும் ஆரோக்கியமான நபர்கள் ஆகியோரின் உடலுறுப்புகள் முதலில் அகற்றப்படுகின்றன. பின்னர், கொதிகலன் பகுதியில் பணிக்கு அனுப்பப்படும் இவர்களில் சிலர் அங்குள்ள கொதிகலனில் தள்ளி உயிருடன் எரிக்கப்பட்டு விடுவதாகவும் அந்த ஆவணப்படம் சுட்டிக்காட்டியுள்ளது.
-http://www.maalaimalar.com