எகிப்து நாட்டின் சினாய்ப் பகுதியில் ராணுவத்தினர் புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
சினாய் மாகாணத்தின் ஷேக் ஜோவேத், ரஃபா ஆகிய நகரங்களில் ராணுவத்தினர் தரை வழியாகவும், வான்வழியாகவும் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நிகழ்த்தினர்.
இதில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களது 25 பதுங்குமிடங்களும், 2 வீடுகளும் அழிக்கப்பட்டன என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
எகிப்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியால் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, சினாய் மாகாணத்தில் அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
மதவாதக் கொள்கைகள் கொண்ட முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி ராணுவத்தால் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் மீதும், ராணுவத்தினர் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
-http://www.dinamani.com