வாஷிங்டன்: பயங்கரவாத நாடுகள் என்ற பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா விரைவில் நீக்கும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பனாமாவில் ஆண்டு தோறும் நடைபெறும் பிராந்திய மாநாட்டில் கியூபா கலந்து கொள்ளும். ஆனால் கியூபா அதிபர் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து 1994ஆம் ஆண்டு முதல் இம்மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்து வந்தது.
அண்மையில் கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என அமெரிக்கா அதிபர் ஒபாமா அறிவித்தார். இது தொடர்பாக கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோவுடனும் தொலைபேசியில் ஒபாமா பேசினார்.
இதனைத் தொடர்ந்து அரை நூற்றாண்டுகாலமாக இரு நாடுகளிடையே நீடித்து வந்த பகைமை உறவு மறைந்து நட்புறவு துளிர்க்கத் தொடங்கியது. இந்நிலையில் பனமாவில் இன்று தொடங்கும் பிராந்திய மாநாட்டில் ஒபாமா கலந்து கொள்ள இருக்கிறார். கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ இம்மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே இப் பிராந்திய மாநாட்டில் பங்கேற்க செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவது தொடர்பான நடைமுறைகளை நிறைவு செய்துள்ளோம். விரைவில் கியூபா அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட இருக்கிறது என்றார்.