இந்திய பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட கச்சதீவை மீண்டும் ஒப்படைக்க போவதில்லை என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு சென்ற போது சென்னை விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பின்னர் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதினால் இருநாட்டு மீனவர்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா – இலங்கை மீனவர்களுக்கு இடையே 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் இந்திய மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை இலங்கை அரசு தீர ஆராய்ந்து வருவதாகவும்,
புதிய அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் சிறுபான்மை மக்களுக்கு அதிக அக்கறையுடன் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியிலுள்ள இராணுவம் படிப்படியாக குறைக்கப்படவுள்ளதுடன், அப்பகுதியில் இராணுவத்திற்கு வழங்கி மீதமுள்ள காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்ற போதிலும் கடலில் எல்லையை நம்மால் நிர்ணயிக்க முடியாது என தெரிவித்த அமைச்சர், இந்திய பாராளுமன்றத்தின் அனுமதியுடன் வழங்கப்பட்ட கச்சதீவை ஒரு போதும் இந்தியாவிற்கு வழங்குவதற்கான பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவிலுள்ள சில அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபம் கருதியே கச்சதீவை மீண்டும் பெற்று கொள்வதற்கு முயற்சித்து வருகின்றனர் என அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
-http://www.tamilwin.com