பத்தாண்டுகளில் இல்லாத மோசமான விபத்து: மூழ்கிய கப்பலில் 700 அகதிகள் இறப்பு?

700_refugees_001லிபியாவிலிருந்து நள்ளிரவில் படகில் வந்த 700 அகதிகள் விபத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என அதிகாரிகள் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேற படகுகள் மூலம் வருவது தற்போது வாடிக்கையாகியுள்ளது.

இதேபோல், சுமார் 700 அகதிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலியை நோக்கி புறப்பட்ட படகு ஒன்று நேற்று முன் தினம் நள்ளிரவு Lampedusa என்ற தீவு அருகே விபத்துக்குள்ளானது.

இத்தகவல் அறிந்த இத்தாலி நாட்டு கப்பல் மீட்பு குழுவினர், விபத்துக்குள்ளான அகதிகளை தேடும் பணியில் கடந்த 24 மணி நேரமாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை நடந்த தேடுதல் பணியில் சுமார் 28 அகதிகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், படகு விபத்து நடந்ததை உறுதிப்படுத்திய மால்டா(Malta) நாட்டு பிரதமர் ஜோசப் மஸ்கட் , இந்த விபத்தில் 700 அகதிகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும், மீட்பு பணியில் உள்ள அதிகாரிகள், விபத்து நடந்து 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளதால், அகதிகளை உயிருடன் மீட்க முடியுமா? என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அகதிகளின் படகு வந்தபோது, அதற்கு அருகே ஒரு சரக்கு கப்பல் வந்ததால் அதை பார்ப்பதற்காக அனைவரும் படகின் ஒரே பக்கத்திற்கு சென்றதால் விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் இதே மத்திய தரைக்கடல் பகுயில் நடந்த படகு விபத்தில் சுமார் 500 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டில் படகு விபத்தில் மட்டும் அகதிகள் சுமார் 1500 பேருக்கு மேல் இறந்துள்ளதாக அஞ்சப்படுவதால், இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது.

தொடரும் படகு விபத்துகளால் அப்பாவி அகதிகள் பலியாவதை தடுக்க இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அவசர கூட்டம் ஒன்றை நடத்த ஐ.நா சபையை வலியுறுத்தியதை தொடர்ந்து, ஐ.நாவின் UNHCR(United Nations High Commissioner for Refugees) ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது.

-http://world.lankasri.com