யேமனில் சவூதி விமானத் தாக்குதல்: ஆயுதக் கிடங்கு வெடித்து 38 பேர் பலி

  • யேமன் தலைநகர் சனாவில் சவூதி தலைமையிலான கூட்டுப் படை விமானம் திங்கள்கிழமை நிகழ்த்திய குண்டு வீச்சில் வெடித்துச் சிதறும் ஆயுதக் கிடங்கு.

    யேமன் தலைநகர் சனாவில் சவூதி தலைமையிலான கூட்டுப் படை விமானம் திங்கள்கிழமை நிகழ்த்திய குண்டு வீச்சில் வெடித்துச் சிதறும் ஆயுதக் கிடங்கு.

யேமன் தலைநகர் சனாவில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை திங்கள்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் ஆயுதக்கிடங்கு வெடித்துச் சிதறியது.

இதில் 38 பேர் உயிரிழந்ததாகவும், 532 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பிற பகுதிகளில் சவூதி அரேபிய கூட்டுப் படை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

யேமனில் கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் சனா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள், தங்களது ஆதிக்கத்தை மேலும் விரிவாக்கத் தொடங்கினர்.

அதனைத் தொடர்ந்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி முதல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், சனா நகரின் ஃபாஸ் அட்டான் என்னுமிடத்தில், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு ஆதரவான ராணுவப் பிரிவின் ஏவுகணைக் கிடங்கில் சவூதி அரேபியக் கூட்டுப் படை விமானங்கள் குண்டு வீசின. மேலும், அப்துல்லா சலேவின் படையினர், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குண்டுவீச்சில், கிடங்கிலிருந்த ஆயுதங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெடித்துச் சிதறின.

இதனால் சனா நகரம் முழுவதும் அதிர்ச்சியில் குலுங்கியது.

பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நொறுங்கின. சாலைகள் முழுவதும் இடிபாடுகள் சிதறியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்ததாகவும், 532 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுப்பு: இந்தத் தாக்குதல் குறித்து கேட்டதற்கு, சவூதி அரேபியக் கூட்டுப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அகமது அல்-அஸ்ஸிரி கருத்து கூற மறுத்து விட்டார்.

சண்டை தொடர்கிறது: இதற்கிடையே, அரசுப் படையினருக்கும், தெற்குப் பகுதியில் முன்னேற முயற்சிக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திங்கள்கிழமை சண்டை தொடர்ந்தது.

இதில் 11 கிளர்ச்சியாளர்களும், 5 அரசுப் படையினரும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பலி எண்ணிக்கை 944: யேமனில் சவூதி அரேபியக் கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து, இதுவரை வன்முறைக்கு 944 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

-http://www.dinamani.com