யேமன் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டால் மீண்டும் தாக்குதல்: சவூதி எச்சரிக்கை

yemenயேமனில் கிளர்ச்சியாளர்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அங்கு கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என்று சவூதி அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவுக்கான சவூதி தூதர் ஆதில் அல்-ஜுபேர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்ததாவது:

ஏறக்குறைய ஒரு மாத காலமாக சவூதி தலைமையிலான 10 நாடுகளின் கூட்டுப் படை யேமனில் நடத்தி வந்த வான்வழித் தாக்குதல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் குறிக்கோளை வெற்றிகரமாக அடைந்துள்ளோம்.

யேமனில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அங்கு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

அந்த நாட்டின் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொள்ளும் பேச்சு விரைவில் தொடங்கப்பட வேண்டும். பொதுத் தேர்தல் நடத்துவதற்கு அது வழி வகுக்கும்.

அந்த நாட்டில் புதிய அரசியலைமைப்புச் சட்டம் இயற்றும் நடவடிக்கை தொடங்க வேண்டும்.

தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ள நிலையைப் பயன்படுத்தி, அங்கு கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபடுவது தெரிந்தால், சவூதி கூட்டுப் படை மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் என்று அமெரிக்காவுக்கான சவூதி தூதர் ஆதில் அல்-ஜுபேர் கூறினார்.

ஏறத்தாழ ஒரு மாத காலமாக யேமன் தலைநகர் சனா, ஏடன், தயீஸ் நகரங்களிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் சவூதி கூட்டுப் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடவடிக்கையை நிறுத்துவதாக சவூதி கூட்டுப்படை அறிவித்தது.

யேமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி தீவிரவாதிகள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். தலைநகர் சனா, தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதையடுத்து, அந்நாட்டு அதிபர் ஹாதி தெற்குப் பகுதியில் உள்ள துறைமுக நகருக்குத் தப்பிச் சென்றார். பின்னர் அங்கிருந்து வெளியேறி அவர் சவூதியில் தஞ்சம் புகுந்தார்.

-http://www.dinamani.com