ஒட்டமன் சாம்ராஜ்ய காலத்தில் ஏறத்தாழ 15 லட்சம் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் 100 ஆண்டு நிறைவு ஆர்மீனியா முழுவதும் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஒட்டமன் சாம்ராஜ்ய காலத்தில் இன்றைய துருக்கியில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1915-ஆம் ஆண்டு, முதல் உலகப் போர் நடைபெற்று வந்த காலத்திலும் அதன் பிறகும் கூட, ஆர்மீனியர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். ஒட்டமன் அல்லது துருக்கி சாம்ராஜ்ய காலத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சம் முதல் 15 லட்சம் வரை கூறப்பட்டு வந்தாலும் 15 லட்சம் என்பது வரலாற்று ஆசிரியர்களால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கையாகும்.
எனினும், சுமார் 5 லட்சம் பேர் இறந்ததாகவும், இவர்களில் பெரும்பாலானோர் பசி, போர் ஆகிய காரணங்களால்தான் உயிரிழந்தனர் என்றும் துருக்கி கூறி வருகிறது.
உயிரிழந்த 15 லட்சம் பேர்களைப் புனிதர்களாக ஆர்மீனிய தேவாலயப் பிரிவு வியாழக்கிழமை அறிவித்தது.
ஒரே நிகழ்ச்சியில், இத்தனை அதிக எண்ணிக்கையிலானோர் புனிதர்களாக அறிவிக்கப்படுவது கிறிஸ்துவ சரித்திரத்தில் இதுவே முதல் முறையாகும்.
ஆர்மீனியா தலைநகர் யெரவானில் நடைபெற்ற சிறப்பு நினைவு நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் புதின், ஃபிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ரஷியா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்மீனியர்களின் கூட்டக்கொலையை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு வருகின்றன. எனினும், அவ்வாறு கூறக் கூடாது என இன்றைய துருக்கி கூறி வருகிறது.
ஆர்மீனியர் இனப்படுகொலை நினைவு நிகழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
-http://www.dinamani.com