எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ்: அடிபணிந்த இந்தோனேஷியா

indonesia_france_002பிரான்ஸ் நாட்டு குடிமகனிற்கு மரண தண்டனை விதிக்க கூடாது என விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு பணிந்து அந்நாட்டை சேர்ந்த கைதியின் மரண தண்டனையை ஒத்தி வைப்பதாக இந்தோனேஷியா அறிவித்துள்ளது.

பிரான்ஸ் குடிமகனான Serge Atlaoui உள்பட, 10 நாடுகளை சேர்ந்த நபர்களை போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டி கடந்த 2008ம் ஆண்டு இந்தோனேஷிய பொலிசார் கைது செய்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பிற்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் சபையும் போதை பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை ஒரு தீர்வாக அமையாது என்பதால், மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இந்தோனேஷிய அரசை வலியுறுத்திருந்தது.

ஆனால், இந்தோனேஷிய அரசு தொடர்ந்து முரண்டு பிடித்து, பிரான்ஸ் குடிமகன் உள்பட 10 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற 72 மணி நேரம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே, இந்தோனேஷியா மரண தண்டனையை நிறைவேற்றினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து, பிரான்ஸ் குடிமகனின் மரண தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக இந்தோனேஷிய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய இந்தோனேஷிய வழக்கறிஞரான Tony Spontana, பிரான்ஸ் கைதியின் மீதான சட்டப்பூர்வ மேல் முறையீட்டு மனு நிலுவையில் உள்ளதால், அவரை தவிர்த்து பிற கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், மரண தண்டனை கைதிகளில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த இருவர் உள்ளதால், அவர்களையும் மரண தண்டனையிலிருந்து விலக்குமாறு அவுஸ்திரேலிய அரசு வலியுறுத்தி வருகிறது.

சர்வதேச அளவில் மரண தண்டனைக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதால், உறுதியான முடிவு எடுக்க முடியாமல் இந்தோனேஷிய அரசு திணறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com

போதைப்பொருள் கடத்திய 10 கைதிகளுக்கு மரண தண்டனை

மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளை சந்திப்பீர்கள்..எச்சரிக்கும் பிரான்ஸ்