உலக சமூகத்தின் காவல் நாய்! இவர்களுக்காக யார் குரல் கொடுப்பார்கள்?

Tarakiஉலகம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் விழித்திருந்து காவல் காக்கின்றான் சமூகத்தின் காவல் நாய் என்று அழைக்கப்படுகின்ற ஊடகவியலாளன்

ஆனால் அந்த காவல் நாய்கள் இலங்கைத் திருநாட்டில் தெருவோரமாக சுட்டுத்தள்ளப்பட்டும், வெட்டி வீழ்த்தப்பட்டும், கடத்தி சித்திரவதை செய்யப்பட்டும், குரல்வளை நசுக்கப்பட்டும் கொல்லப்பட்டதை, கொல்லப்படுவதையும் காலம் கடந்தாலும் மறக்க முடியாது.

பேனா முனையாலும், புகைப்படக்கருவிகளாலும், குரல் ஒலிப்பதிவுகளாலும் உள்ளதை உள்ளபடி தன் உயிரை பணயம் வைத்து குரல்கொடுக்க வேண்டியவனாகின்றான்.

இது  பணத்திற்காக மட்டுமல்ல. பணத்திற்காக ஊடகவியலை தேர்வு செய்கின்றார்கள் என்று இலகுவில் யாராலும் குற்றம் சொல்லிவிட முடியாது. பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல ஊடகவியல்.

இலங்கையில் இனப்படுகொலை மட்டும் நடக்கவில்லை. ஊடகப்படுகொலையும் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கின்றது.  ஒவ்வொரு தெருக்களும் சொல்லும் எத்தனை பேரை நான் வழியில் தாங்கியிருந்தேன் என்று.

பத்திரிகை அலுவலகத்தில், பத்திரிகை விநியோகத்திற்கு காலையில் சென்ற வேளை, செய்தி சேகரிக்க சென்றவேளை, இராணுவ முகாங்களுக்குள் அழைத்து சென்று, என அத்தனை இடங்களிலும் தெரு நாயை கொன்றது போல நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு இன்று அவர்களின் குடும்பங்கள் அநாதையாக்கப்பட்டு ஒரு வேளை உணவிற்கு வழியின்றி கையேந்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

உலகில் ஏனைய தொழில்களை விட மிகவும் ஆபத்தானதும், பாதுகாப்பற்றதுமான இத்தொழில் இன்று கௌரவமற்றதாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது.

கௌரமற்றது என்று சொன்னதும் தவறாக நினைத்து விடாதீர்கள்,கௌரவமற்றவர்களா பாக்கின்றார்கள்.  புரியவில்லையா?

இலங்கை ஊடகவியலாளனாக இருந்தால் இது புரியும். ஒரு நேர்காணலுக்காகவோ அன்றி அவசர தகவல்களுக்காகவோ இலங்கை அதிகாரிகளிடம் நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டால்�. இன்று நேரமில்லை, நாளை நேரமில்லை என்பார்கள்.

பின்னர் ஒரு நாள் குறித்த நேரத்திற்கு வரும்படி சொல்வார்கள். அந்த நேரம் சென்று காத்திருந்தால் வரச்சொன்னவர் சொன்ன நேரத்திற்கு வரமாட்டார். வந்திருந்தாலும் அதற்கு ஒரு நக்கல் பாணியிலான பதில் வைத்திருப்பார்.

இவை தவிர, மன அழுத்தத்திற்கும்,தேவையற்ற ஏக்கங்களுக்கும் ஆளாகின்ற ஒரு தொழில் என்றால் அதில் முதன்மை பெறுவது இந்த ஊடகவியல் தான்.

இலங்கையில் தூக்கத்தில் இருக்கும் பொழுது, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் யாரோ? எந்த விசாரணை முகாமிற்கு வரச்சொல்லி அழைக்கிறார்களோ? எந்தக் கொலை மிரட்டல்காரர்களோ? என்று அச்சத்திலேயே பாதி உயிர் போய்வரும்.

வீதியால் சென்று வர முடியுமா? பின்னால் ஒரு வாகனம் பேரிரைச்சலோடு வருமாக இருந்தால் முதுகு கூசும். இது இயல்பாக பழகிப்போய்விட்ட ஒன்று.
ஒருபுறம் ஊடகவியலாளர்களை அடக்கிக்கொண்டு மறுபுறம் ஊடக நிறுவனங்களை சிதைத்த வரலாறுகளும் உண்டு.

முக்கியமாக யாழ்.பிராந்திய பத்திரிகை அலுவலகங்கள் வாங்காத அடியில்லை. கொழும்பிலும் பல ஊடகங்கள் அடிவாங்கி மீண்டும் எழுந்து நின்று கருத்துக்குரலாய் ஒலி(ளி)த்துக்கொண்டு தான் இருக்கின்றன.

ஒவ்வொரு அரசாங்கங்களும் ஆட்சி மாறும் போது முதலில் தமது கவனத்தை திசை திருப்புவது ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தான்.

பண்டாரநாயக்க, பிரேமதாச, சந்திரிக்கா, மகிந்த ராஜபக்‌ஷ என்று ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தங்கள் பங்கை விட்டு வைக்கவில்லை. இதில் அதிகமான கொலைகளை செய்தது சமாதானப்புறா என்று வர்ணிக்கப்படுகின்ற சந்திரிக்காவும், மகிந்தருமே.

யார் யாரெல்லாம் தமது ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றார்களோ அவர்களின் நிழலைக்கூட இந்த ஆட்சியாளர்கள் விட்டுவைக்கவில்லை. அப்படியொரு கடமையை செய்தார்கள் இவர்கள்.

ஒரு புகைப்படம் ஆயிரம் செய்தி சொல்லும் என்பார்கள். ஆயிரம் செய்திகளைச் சொல்லி ஒரு செய்திப்புகைப்படமாக வெளிவந்தவர்கள் தான் இன்றைய ஊடகவியலாளர்கள்.

இப்பொழுது கைதுகளும், மிரட்டல்களும் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன. யுத்தகாலப்பகுதியில் தமிழ் ஊடகவியலாளர்கள் தம்மை வருத்தி செய்திகளை வெளியிட்டார்கள். வெளியில் போக முடியாத சூழல் போனால் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது, கண்ட இடத்திலேயே சுடுதல், ஓடஓட விரட்டி விரட்டி தாக்கியமை என்று எத்தனையோ நிட்டூரங்களை சந்தித்தனர் இவர்கள்.

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட நிலையில் வீட்டார் சென்று கேட்டால் நாங்கள் அவர்களை காணவில்லை, கடத்தவில்லை என்று பல பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்ட வரலாறு இன்றும் உண்டு.

செய்திகள் நூறு பத்திரிகைகளில் வரும். ஆனால் கொல்லப்பட்ட ஊடகவியலாளன் பற்றி சின்னதாக ஒரு மூலையில் செய்திவரும். அந்த செய்தியோடு அவன் செய்தி முடியும். ஆனால் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சொல்லும் செய்தி சற்று வித்தியாசமாக இருக்கின்றது.

புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பத்திரிகைச் செய்திகள் படிப்பதில்லை போலும் அவர். இன்றும் அடக்கு முறைகளும்,கொலை மிரட்டல்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

இந்த மாதத்தில் மட்டும், மூன்று ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கொலை மிரட்டல்களுக்கு உள்ளாகியிருப்பதோடு பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்க சென்றிருந்த வேளை அங்கே கொலை மிரட்டல் விடுத்தவர்கள் இருப்பதை கண்டுள்ளனர். இன்னொரு ஊடகவியலாளர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இவையெல்லாம் பலருக்கும் ஊடக சுதந்திரமாக தெரிகின்றது. சுதந்திரம் என்பதன் பொருள் என்னவென்பது தெரியாமல் பேசுகின்றார்கள் இன்று.

எத்தனையோ ஊடகவியலாளர்கள் ஊடக சுதந்திரமற்று பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளாகி இன்று நாட்டை விட்டு வெளியேறி வாழ்கின்றார்கள். இதுபோலவே மூத்த சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்கள் 2005ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இது தான் ஜனநாயக நாட்டின் தலைநகரத்தின் சுதந்திரம்.

வன்னியில் விடுதலைப்புலிகளின் புலிகளின் குரல் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தான் ஊடக சுதந்திரம்.

உயிரை விட பெறுமதியானது வேறு எதுவும் இல்லை. ஆனால் இலங்கை ஊடகவியலாளர்கள் பலர் பெறுமதியான செய்திகளைக் கொடுத்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இது தான் அவர்களுக்கான கடமை.

இவ்வாறான ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு இன்று சென்று பார்த்தால் தெரியும் வேதனையின் கோர முகங்கள் தாண்டவம் ஆடும். ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டாலும் இன்றும் அவர்களின் வழியில் இளைய ஊடகவியலாளர்கள் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அவர்கள் விட்டுச்சென்ற பணியை இவர்கள் செய்வார்கள் அவர்களின் ஆத்மீகமான ஆன்மாவை சுமந்து கொண்டு.!

– SP Thas –

-http://www.tamilwin.com

TAGS: