போகோ ஹராமிடமிருந்து 293 பெண்கள் விடுவிப்பு

boko_haram_abducted_girlsநைஜீரியாவில் போகா ஹராம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த 293 பெண்களை விடுவித்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

எனினும், இவர்களில் போகோ ஹராமால் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் யாரும் இல்லை எனவும் ராணுவம் கூறியுள்ளது.

இதுகுறித்து “சுட்டுரை’ (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளதாவது:

வடகிழக்குப் பகுதியிலுள்ள சம்பிஸா வனப்பகுதியில், நான்கு போகோ ஹராம் பயங்கரவாத முகாம்களை ராணுவம் தாக்கி அழித்தது.

அங்கு பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த 200 சிறுமிகளும், 93 பெண்களும் ராணுவத்தால் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களில், சிபோக் நகரிலிருந்து கடந்த ஆண்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் யாரும் இல்லை என்று நைஜீரிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

நைஜீரியாவின் சிபோக் நகரிலுள்ள அரசுப் பள்ளிக்குள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புகுந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் அங்கிருந்து 276 பள்ளி மாணவிகளைக் கடத்திச் சென்றனர்.

அவர்களில் 57 பேர் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்தனர். எனினும் 219 மாணவிகள் இன்னும் பயங்கரவாதிகளின் பிடியிலேயே சிக்கியுள்ளனர்.

-http://www.dinamani.com