நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாள்கள் ஆன நிலையில், அங்கு உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, தற்காலிக முகாம்களுக்கு சென்ற பிரதமர் சுஷீல் கொய்ராலாவிடம், தங்களுக்கு எந்த நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை எனக் கூறி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம், “விரைவில் நிவாரணப் பொருள்கள் கிடைக்கும்’ என பிரதமர் சுஷீல் கொய்ராலா உறுதியளித்தார்.
இதனிடையே, அங்கு நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 6,000ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள், திறந்தவெளிகளில் தங்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் போலீஸாருடன் மக்கள் மோதலில் ஈடுபட்டதுடன், குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை பறித்துச் சென்றனர்.
காத்மாண்டு நகரில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக, அங்குள்ள பிரதான பேருந்து நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர். ஆனால், பேருந்துகள் ஏதும் வராததால், ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கலவரத் தடுப்பு போலீஸார் வந்தனர்.
இதனிடையே, கட்டட இடிபாடுகளில் இருந்து 6,000 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் துணைப் பிரதமர் பாம்தேவ் கெளதம் தெரிவித்தார்.
நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 11,000 பேர் காயமடைந்துள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொடும் என அந்நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
மீட்பு பணிகளில் தடை: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெகு தொலைவில் உள்ள கிராமங்களுக்கு செல்ல மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். நிலச்சரிவும், கடுமையான மழையும் மீட்பு முயற்சிகளுக்கு தடையாக உள்ளன. எனினும், இந்த கிராமங்களில், ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருள்கள், கூடாரங்களுக்கான துணிகள், மருந்துப் பொருள்கள் வீசப்பட்டு வருவதாக அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கோர்க்கா, சிந்துபால்சோக், காவ்ரி, நுவாகோட் ஆகிய மாவட்டங்களில், நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில கிராமங்களுக்கு இன்னனும் மீட்பு குழுவினர் சென்றடையவில்லை.
இந்தியா உதவி: இதனிடையே, நேபாளத்தில் நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் காத்மாண்டு, கோர்க்கா மாவட்டத்தில் மீட்பு, நிவாரணப் பணிகளில் உதவ இந்தியா கவனம் செலுத்தி வருவதாக அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ரஞ்சித் ராய் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையினர் சுமார் 500 பேர், மீட்புப் பணிகளுக்காக நேபாளத்தில் இருக்கின்றனர் என்றார். நேபாள நிலநடுக்கத்தில், இதுவரை 15 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.
நேபாளம் நன்றி: இதனிடையே, மீட்புப் பணிகளில் உதவும் இந்தியாவுக்கு, நேபாளம் நன்றி தெரிவித்துள்ளது.
-http://www.dinamani.com