காஷ்மீரில் புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தும் முயற்சி ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரானது: பாகிஸ்தான்

disputedkashmirmaptamil

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பள்ளத்தாக்குப் பகுதியில் புதிய குடியிருப்புகளை அமைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், இது ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த பண்டிட்டுகளை மீள்குடியேற்றம் செய்வதற்காக, பள்ளத்தாக்குப் பகுதியில் தனிக் குடியிருப்புகள் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு கூறியுள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம், இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வெளியாட்களை குடியமர்த்துவதன் மூலம், மக்கள் தொகை விகிதத்தை மாற்ற இந்தியா முயலுகிறது. பள்ளத்தாக்குப் பகுதியின் நில அமைப்பை மாற்றும் வகையில், அப்பகுதியில் தனிக் குடியிருப்புகளை அமைக்க முயலுவது ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிரானதாகும்.

பாகிஸ்தானியர்களிடம் பாகுபாடு: குஜராத் கடல்பகுதியில் கடந்த 4-ஆம் தேதி தத்தளித்துக் கொண்டிருந்த யேமன் நாட்டுக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான் மாலுமிகளிடம், இந்திய அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

அதாவது, யேமன் நாட்டு ஊழியர்களை விடுதிகளில் தங்க வைத்துவிட்டு, பாகிஸ்தானியர்களை மட்டும் காவல் நிலையங்களில் தங்க வைத்துள்ளனர்.

குஜராத்தை ஒட்டிய சர்வதேச எல்லையில் கடந்த 20-ஆம் தேதி ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களுடன் வந்த பாகிஸ்தான் படகை சிறைப் பிடித்ததாக இந்தியா கூறுகிறது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு விவரங்களைக் கோரியது. ஆனால், இந்திய அரசு இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்றார் தஸ்னீம் அஸ்லாம்.

-http://www.dinamani.com