மெக்சிகன்சிட்டி, மே 2– மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் பெருமளவில் நடை பெறுகிறது. எனவே, அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக உள்ளது. நேற்று ராணுவமும், போலீசாரும் இணைந்து போதை பொருள் கடத்தல் கும்பலை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர்.
ஜலிஸ்கோ மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் பறந்து போதை பொருள் கடத்தல் கும்பலை கண்காணித்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலும் துப்பாக்கியால் சுட்டது.
அதில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். அதை தொடர்ந்து ஜலிஸ்கோ மாகாணத்தில் 25 நகரங்களில் போதை பொருள் கடத்தல் கும்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது 39 இடங்களில் ரோடுகள் அடைக்கப்பட்டன. பியர்போ வல்லார்டா, குயா தாலாஜரா உள்ளிட்ட நகரங்களில் 40–க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
வங்கிகள், கியாஸ் நிரப்பும் நிலையங்களுக்கு தீவைக்கப்பட்டன. அதை தொடர்ந்து போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். கொலிமா மாகாணத்தில் மிசோகன், குயானா ஜுயோதே பகுதியில் 15 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
மற்றொரு ராணுவ ஹெலிகாப்டர் குயுகா என்ற இடத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டது. இதனால் அது அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதில் 18 வீரர்கள் இருந்தனர். அவர்களில் 3 வீரர்களை காணவில்லை. 10 ராணுவ வீரர்கள், 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
நேற்று மெக்சிகோவில் நடந்த மோதல்களில் 3 ராணுவ வீரர்கள் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயம் அடைந்தனர். 3 போதை பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர்.
மோதலை தொடர்ந்து அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் வாழும் தனது குடிமக்கள் வெளியே எங்கும் பயணம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
-http://www.maalaimalar.com