நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மேலும் 234 பெண்களை மீட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து “சுட்டுரை’ (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நைஜீரிய ராணும் மேலும் 234 பெண்கள், சிறுமிகளை மீட்டுள்ளது.
காவுரி பகுதியிலும், சம்பிஸா வனத்தின் எல்லைப் பகுதியிலும் பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர் என்று ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இத்துடன், ஏற்கெனவே ராணுவத்தால் மீட்கப்பட்ட 443 பெண்களையும் சேர்த்து 677 பேர் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போகோ ஹராம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த சம்பிஸா வனப்பகுதியில் பல வாரங்களாக வான்வழித் தாக்குதல் நிகழ்த்திய ராணுவம், தற்போது அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது.
இந்த வனப் பகுதிதான் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் கடைசிப் புகலிடம் என்றும், இங்கு அவர்கள் முழுமையாக முறியடிக்கப்பட்டால் பயங்கரவாதப் பிடியிலிருந்து நைஜீரியா விடுபடும் எனவும் கூறப்படுகிறது.
6 ஆண்டுகளாக நைஜீரியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹராம் அமைப்பினர், இதுவரை எத்தனை பெண்களையும், சிறுமிகளையும் கடத்தி வைத்துள்ளனர் என்பது குறித்து தகவல் இல்லை.
பயங்கரவாதிகளின் பிடியில் நீண்டகாலம் இருந்த சில பெண்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களை மீட்க வந்த ராணுவத்தினர் மீதே அவர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் ராணுவம் தெரிவித்தது.
எனினும், அவர்கள் போகோ ஹராம் அமைப்பில் விரும்பி இணைந்தவர்களா, அல்லது பயங்கரவாதிகளின் உறவினர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
சம்பிஸா வனப் பகுயிலிருந்து ஏராளமான பெண்கள் மீட்கப்பட்ட நிலையிலும், சிபோக் பள்ளியிலிருந்து கடந்த ஆண்டு கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து அரசு இதுவரை தரப்பிலிருந்து தகவல் இல்லை.
-http://www.dinamani.com