காவலில் கருப்பின இளைஞர் மரணம்: 6 போலீஸார் மீது கொலை குற்றச்சாட்டு

  • ஃபிரெடி கிரே மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள (1) சீஸர் குட்ஸன், (2) கேரெட் மில்லர், (3) எட்வர்ட் நீரோ, (4) வில்லியம் போர்ட்டர், (5) பிரையன் ரைஸ், (6) அலீசியா ஒயிட்.

    ஃபிரெடி கிரே மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள (1) சீஸர் குட்ஸன், (2) கேரெட் மில்லர், (3) எட்வர்ட் நீரோ, (4) வில்லியம் போர்ட்டர், (5) பிரையன் ரைஸ், (6) அலீசியா ஒயிட்.

அமெரிக்காவில் போலீஸார் காவலில் கருப்பின இளைஞர் மரணமடைந்தது தொடர்பாக அவரைக் கைது செய்த 6 போலீஸார் மீது அரசு தரப்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேரிலாண்ட் மாகாணத்தைச் சேர்ந்த பால்டிமோர் நகரில், ஃபிரெடி கிரே (25) என்ற கருப்பின இளைஞரை போலீஸார் கடந்த மாதம் 12-ஆம் தேதி கைது செய்தனர். மடக்குக் கத்தி வைத்திருந்ததாக ஃபிரெடி கிரேயை கைது செய்யும்போது, போலீஸார் அளவுக்கு அதிகமான வன்முறையைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது.

கைதுக்குப் பின் முதுகெலும்பு உடைந்த நிலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபிரெடி கிரே, கோமா நிலைக்குச் சென்றார்.

கருப்பினத்தவர்களிடம் அமெரிக்க போலீஸார் அதிக முரட்டுத் தனத்துடனும், இனவெறியுடனும் நடந்து கொள்வதாக அந்த நாட்டில் ஏற்கெனவே நிலவி வரும் சர்ச்சைக்கு இந்தச் சம்பவம் மேலும் வலு சேர்த்தது.

இந்தச் சூழலில், சிகிச்சை பலனின்றி ஃபிரெடி கிரே கடந்த 19-ஆம் தேதி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து பால்டிமோர் நகரின் பல்வேறு பகுதிகளில் இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், ஃபிரெடி கிரே மரணம் தொடர்பாக, அவரை கைது செய்த 6 போலீஸார் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

தாற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த 6 பேரில், தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பால்டிமோர் மேயர் ஸ்டிஃபானி ராலிங்ஸ் தெரிவித்தார். இதுகுறித்து மேரிலாண்ட் மாகாண அரசு தலைமை வழக்குரைஞர் மரிலின் மோஸ்பி கூறியதாவது:

ஃபிரெடி கிரேயின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, இது தொடர்பான விசாரணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மரணம் ஒரு கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

அவரது கைது சட்ட விரோதமானது என்பதுடன், காவலின்போது போலீஸார் அவரை நடத்திய விதம், உயிர் பறிப்புக்கு இணையானது என்றார் மோஸ்பி.

-http://www.dinamani.com