நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் எந்தளவு தூரம் கொடூரங்களை அனுபவித்தார்கள் என்பது உலகமே அறிந்த விடயமாகும்.
இருந்த போதிலும் கடந்த அரசாங்கம் இதனை ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. மாறாக, தமிழ் மக்களை மலினப்படுத்தும் வகையிலேயே தனது நடவடிக்கைகளை தொடர்ந்து வந்ததாக தமிழ் மக்கள் மிகுந்த மன வேதனை கொண்டுள்ளனர்.
குறிப்பாக, தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான காணிகள், உயர்பாதுகாப்பு வலயம் என்ற பேரிலும், இராணுவ தேவைகளுக்கென்ற கோதாவிலும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் முன்னைய அரசினால் கபளீகரம் செய்யப்பட்டன. இதனால், தங்கள் பூர்வீக நிலங்களிலிருந்தும் வெளியேறிய மக்கள் வருடக்கணக்கில் நாடோடி வாழ்க்கையை வாழ நேரிட்டது.
இவர்களை மீளக்குடியேற்ற வேண்டும், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என யுத்தம் முடிவுக்கு வந்த நிலையிலும் கூட முன்னைய அரசு கருதவில்லை.
காணிகளை இழந்த தமிழ் பேசும் மக்கள், மிகுந்த பெருமூச்சுக்களுக்கு மத்தியிலேயே கடந்த 30 வருட காலத்தை கடத்தி விட்டார்கள். இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தமக்கு ஓர் விடிவைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் காணப்படுகின்றனர்.
அண்மையில், யாழ்ப்பாணம் வலிகாமம், வடக்கிலும் கிழக்கிலும் சுமார் 1000 ஏக்கர் காணி, மக்களிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறு கையளிக்கப்பட்ட காணிகளில் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என்பன முற்று முழுதாக அழிந்தொழிந்த நிலையில் வெறும் பற்றைக்காடுகளே காணப்பட்டன.
இதனால், மக்கள் தங்கள் சொந்த இடங்களை தேடிக் கண்டு பிடிப்பதில் பெரும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளாக நேர்ந்தது. உதாரணமாக சுமார் 30 வயதில் தமது காணியிலிருந்து வெளியேறிய நபர் ஒருவர், அதனை மீண்டும் 60 வயதில் வந்து தேடிக் கண்டுபிடிப்பதென்பது எந்தளவு கடினமானதென்பது அனைவரும் அறிந்த உண்மை.
அவ்வாறானதொரு நிலைமையே குறித்த பிரதேச மக்களுக்கும் ஏற்பட்டது. இருந்த போதிலும் தாம் மரணிப்பதற்கு முன்னர் தங்கள் சொந்த நிலத்தை ஒரு தடவையேனும் பார்த்துவிட வேண்டும், அதில் வாழ்ந்து விடவேண்டும் என்ற ஆதங்கமே குறித்த மக்களிடம் காணப்பட்டது.
அந்த வகையில், புதிய ஆட்சி மக்களின் பிரச்சினையை சற்றேனும் திரும்பி பார்த்திருப்பது அவர்களுக்குப் பெரும் திருப்தியை அளித்துள்ளது. இவ்வாறே அப்பாவி மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட அனைத்துக் காணிகளும் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.
அந்த வகையில், சம்பூரில் முதலீட்டு வலயத்திற்காக சுவீகரிக்கப்பட்ட 818 ஏக்கர் காணியை மீளப்பெற்று பொதுமக்களுக்கு கையளிக்குமுகமாக வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வியாழனன்று கையெழுத்திட்டுள்ளார்.
இதையடுத்து மக்களை மீள அங்கு குடியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், சம்பூர் கடற்படை முகாம் இடமாற்றப்பட்டு அப்பிரதேசத்தில் 570 குடும்பங்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
சம்பூர் முதலீ்ட்டுச் சபைக்கு சொந்தமான 818 ஏக்கர் காணியும், கடற்படை முகாம் இருந்த 237 ஏக்கர் காணியுமாக 1055 ஏக்கர் காணியும் விடுவிக்கத் தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து வந்தது.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இக்காணிகளை மக்களுக்கு மீளக் கையளிக்கும் வகையில் எடுத்திருக்கும் நடவடிக்கையானது நிச்சயம் குறித்த மக்களின் நீண்ட கால துயரத்திற்கு ஒரு விடிவைத் தருமென்று நம்பலாம்.
நாட்டில் யுத்தம் அகோரமடைந்திருந்த நிலையில் கொழும்பில் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி இராணுவத் தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து, அதற்குப் பழிவாங்கும் வகையில் அதே தினம் மாலை திருகோணமலை சம்பூர் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் சம்பூர் பிரதேச மக்கள் இரவோடு இரவாகத் தமது சொந்த இடங்களிலிருந்தும் வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டது. இந்த நிலையில் கடந்த பல வருட காலமாக சம்பூர் மக்கள் ஆங்காங்கே நலன்புரி நிலையங்களிலும் உற்றார், உறவினர்கள் வீடுகளிலுமே தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தனர்.
எப்படியாவது, தமது சொந்த இடங்களில் தம்மை மீளக்குடியமர்த்த வேண்டுமென கோரி குறித்த மக்கள் தொடர்ச்சியாகப் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அப்பாவி மக்களின் துயரை உணர்ந்து அரசாங்கம் முதற்கட்டமாக 818 ஏக்கர் காணியை மீள வழங்க முன்வந்துள்ளது.
அந்த வகையில் எஞ்சியிருக்கும் 237 ஏக்கர் காணியையும் குறித்த மக்களுக்கு துரிதமாக வழங்கி, அவர்களின் துயரைத் துடைப்பது அத்தியாவசியமாகும். இதன் மூலமே புதிய அரசாங்கத்தின் நல்லாட்சி மேலோங்குவதுடன், மக்கள் மனங்களிலும் நல்லெண்ணம் பிறக்க வழிவகுப்பதாக இருக்கும்.
அரசின் இத்தகைய செயல்கள், கடந்த காலங்களைப் போலன்றி புதிய அரசு, தமிழ் பேசும் மக்களின் துயரைத் துடைக்கும் என்ற நம்பிக்கையை மேலோங்கச் செய்வதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அந்த வகையில், இந்த சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
கடந்த வியாழனன்று ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், 30 வருடங்களுக்கு மேலாக காயப்பட்டுப் போயிருக்கும் தமிழ் மக்களின் இதயங்களை ஆறுதல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள் அரசு தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சியின்போது வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் மனித உரிமை மீறல்கள் அளவுகடந்த நிலையில் இடம்பெற்றிருந்தன. இதனை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மனித உரிமை மீறல்கள் உண்மையாக இடம்பெற்றுள்ளதை சர்வதேசம் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் மனித உரிமை மீறல் பற்றி பேசியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் உட்பட அனைவர் மீதும் புலி முத்திரை குத்தி தேசத்துரோகக் குற்றச்சாட்டை கடந்த அரசு சுமத்தியது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிப்படையானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் அவசியமாகும். இதற்கு சர்வதேச உபாய ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சினை உள்ளது என்ற கேள்வியையே, மேல் மட்டம் தொடக்கம் அனைத்துத் தரப்பினரும் கேட்டனர். அந்த நிலைமை மாறி இன்றைய ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்ற மனோநிலை உயர் மட்டங்களிலும் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
அந்த வகையில் புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வை முன்வைப்பதன் வாயிலாகவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கும் விடிவு காண்பதுடன், நாட்டில் நல்லாட்சியையும் மக்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
கடந்த காலங்களில் வெறுமனே உதட்டளவில் சமாதானம் பேசிக்கொண்டு மக்கள் மத்தியில் இனவாத சிந்தனையை விதைத்து, அதன் மூலம் சிறுபான்மை தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்கவே ஆட்சியாளர்கள் முனைந்தார்கள் என்பது பரவலான குற்றச்சாட்டாகும்.
இதனால் மக்கள் மத்தியில் குரோத உணர்வும், புரிந்துணர்வற்ற நிலையுமே காணப்பட்டது. ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டே பார்த்தார்கள். இதனால், நாட்டில் அச்சமும், பீதியுமே குடிகொண்டிருந்தது. ஆனால், அந்த நிலைமை தற்பொழுது மாறியுள்ளது. இனங்களிடையே படிப்படியாக புரிந்துணர்வு உருவாகி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும், சுவீகரிக்கப்பட்ட அவர்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும், அனைத்து இன மக்களும் ஒரே கண்ணோட்டத்துடன் நோக்கப்பட வேண்டுமென பெரும்பான்மை சிங்கள மக்கள் வெளிப்படையாகக் குரல்கொடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதனால், கடும்போக்காளர்களும், இனவாதிகளும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இந்தவிதமான சூழல் மேலும் முன்னேற்றமடையுமானால் இந்த நாட்டில் ஐக்கியமும், சமாதானமும் நீடித்து நிலைப்பதாகவே இருக்கும். அதற்கான பங்களிப்பை சகல அரசியல் தலைவர்களும் உணர்ந்து மேற்கொள்வதே இன்றைய தேவையாகும்.
அதனை அவர்கள் இதயசுத்தியுடன் செய்வார்களேயானால், நாடு உண்மையான நல்லாட்சியை அடையக்கூடியதாக இருக்கும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
-http://www.tamilwin.com