தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முடிவு வர வேண்டிய காலகட்டம் வந்து விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் கிழக்கு மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கத்தினை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமையன்று மாலை அவ்வூர்ப் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஒரு நாட்டில் ஒரு பிரச்சினை சதாகாலமும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. அது ஒரு தொடர் கதையாக இருக்கவும் முடியாது. ஏதோவொரு காலகட்டத்தில் முடிவு வந்தேயாக வேண்டும். சாத்வீகப் போராட்டம், அரசியல் போராட்டம், ஜனநாயகப் போராட்டம், ஆயுதப் போராட்டம், இராஜதந்திரப் போராட்டம் என்று இப்பொழுது எம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் முடிவுறாத பிரச்சினைக்கு முடிவு வர வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.
தற்பொழுது இலங்கை அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றது. மனித உரிமைச் சட்டங்களையும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும் மீறி நடந்தததன் காரணமாகவும் போர் நியமங்களை மீறியதன் காரணமாக சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலிலே என்ன விதமான முடிவை எடுக்கப் போகின்றார்கள் என்பதை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
எமது மக்களின் உடனடித் தேவைகள், காணி விடயங்கள், தடுப்புக் காவலில் உள்ளவர்கள், காணாமல் போனவர்கள் அவற்றுக்கெல்லாம் மேலதிகமாக என்னவிதமான அரசியல் தீர்வை நாடி நிற்கப் போகின்றோம் என்பதை அந்தத் தேர்தலின் மூலம் சர்வதேச சமூகத்திற்குச் சொல்லியாக வேண்டும். இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கம் ஏற்படுவதாக இருந்தால், என்னவிதமான அரசியல் தீர்வின் அடிப்படையில் அது ஏற்படலாம் என்பதைப் பற்றியும் சர்வதேச சமூகத்திற்கு நாம் சொல்லியாக வேண்டும்.
தமிழ் மக்கள் தங்களின் வாக்களிப்பின் மூலமாக அவ்விதமான ஒரு அரசியல் தீர்வைத்தான் வேண்டி நிற்கின்றார்கள் என்றும் நாம் நிரூபித்தாக வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் சென்று உண்மையைப் பேசுவார் என்று எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கின்றது. தமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வைப் பெற்று அவர்கள் சம அந்தஸ்துடன் வாழ வேண்டும்.
சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் தமிழ் மக்களுக்குப் போதிய சுயாட்சி இருக்க வேண்டும் என்ற உண்மையான கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதை வலியுறுத்தி உலகறியச் செய்வதற்கு உங்களது கையில் இருக்கும் வாக்குரிமை என்ற பலத்தை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் ,துதான் இங்கு நான் விடுக்கும் பகிரங்கச் செய்தியும் எனது பணிவான வேண்டுகோளுமாகும்.
நாங்கள் இந்த நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிரணியிலுள்ளவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இதுதான் தமிழ் மக்களுடைய அபிலாசை என்கின்ற ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். நீண்டகாலமாக பலவிதமான துயரங்களை எதிர்நோக்கும் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட நாட்டிற்குள் இவ்விதமான ஒரு தீர்வைக் காண்பதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதை நாம் உரத்துச் சொல்லியாக வேண்டும்.
எனவே பொதுமக்களாகிய நீங்கள் உங்களது கடமையைச் சிறப்பாக நிறைவேற்றி அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைப் பலப்படுத்த வேண்டிய கடமை இருக்கின்றது’ என்றார் இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், பி. செல்வராசா, பி. அரியநேத்திரன், எஸ். யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர். துரைரெட்ணம், ஜி. கிருஸ்ணபிள்ளை உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
-http://www.pathivu.com