அல்-பாக்தாதி பலத்த காயம் எதிரொலி: ஐ.எஸ்.அமைப்புக்கு புதிய இடைக்காலத் தலைவர்?

அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பின் அன்றாட அலுவல்களைக் கவனித்துக் கொள்வதற்காக தாற்காலிகத் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, ஐ.எஸ். அமைப்பிலிருந்து விலகி வந்தவர்களை மேற்கோள்காட்டி “தி டெய்லி பீஸ்ட்’ வலைதளம் குறிப்பிட்டுள்ளதாவது:
வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அல்-பாக்தாதியின் முதுகெலும்பு முறிந்ததால் அவரது இடது கால் செயலிழந்துவிட்டது.

தற்போது அவர் இராக்கிலிருந்து சிரியாவின் ரக்கா நகருக்கு இடம் மாறியுள்ளார். அவர் சுயநினைவுடன் செயல்பட்டாலும், உடல்நிலை மோசமாக உள்ளது.
எனவே, அமைப்பின் அன்றாட அலுவல்களை கவனித்துக் கொள்ள தாற்காலிகத் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க அமைப்பின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. அல்-பாக்தாதிக்கு அடுத்தபடியாக, அவரது வழிகாட்டுதலின்படி அந்த இடைக்காலத் தலைவர் செயல்படுவார் என்று அந்த வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com