வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படும்: தென்கொரியா ஆழ்ந்த கவலை

nkoreaசியோல், மே.12- நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையை வடகொரியா சோதித்து பார்த்தது. இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் என தென்கொரியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

கொரிய தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள வடகொரியா, உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நவீன ஆயுதங்களை பெருமளவில் குவித்து வருகிறது. இவ்வாறு உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி பலமுறை அணுகுண்டு சோதனைகளை நடத்தியதால் ஐ.நா. மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைக்கும் அந்த நாடு உள்ளாகி இருக்கிறது.

எனினும் இந்த தடைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதிநவீன ஏவுகணைகளை சோதித்து பார்த்து வருகிறது. இது அண்டை நாடான தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணைகளை வடகொரியா சோதிப்பதற்கு ஐ.நா. ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனினும் இத்தகையை ஏவுகணைகளை வடகொரியா அடிக்கடி சோதித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்க வல்ல அதிநவீன ஏவுகணையை வடகொரியா சமீபத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் அன் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இந்த சோதனை தொடர்பான படங்களை வடகொரிய அரசு நாளிதழ் வெளியிட்டது.

வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரியாவுக்கு இது மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தென்கொரிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் கிம் மின்-சியோக் கூறுகையில், ‘நீர்மூழ்கியில் இருந்து புறப்பட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணைகளை தயாரிப்பதை வடகொரியா உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் இது கொரிய தீபகற்பம் மற்றும் வடகிழக்கு ஆசியாவின் நிலைத்தன்மையை பாதிக்கும்’ என்றார்.

நீர்மூழ்கியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் பெற்ற ஏவுகணையை வடகொரியா தற்போது சோதித்து பார்த்திருந்தாலும், இது தொடர்பான கூடுதல் உபகரணங்களை தயாரிக்க அந்த நாட்டுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என தென்கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் இந்த ஏவுகணைகளுடன் கூடிய முழு நீர்மூழ்கி கப்பலை 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் வடகொரியாவால் தயாரிக்க முடியும் எனவும் தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

-maalaimalar.com