வங்கதேசத்தில் வலைதளக் கட்டுரைகள் மூலம் மதச்சார்பற்ற கருத்துகளைப் பரப்பி வந்த ஆனந்த பிஜோய் தாஸ் (33) என்பவரை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அந்த நாட்டில் மதவதிகளால் படுகொலை செய்யப்படும் மூன்றாவது வலைதளக் கட்டுரையாளர் ஆனந்த பிஜோய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாவது:
சில்ஹெட் நகரிலுள்ள தனது இல்லத்திலிருந்து அலுவலகம் நோக்கிப் புறப்பட்ட ஆனந்த பிஜோயை, முகமூடி அணிந்த சிலர் அரிவாளால் வெட்டினர்.
அவருக்குப் பின்புறத்திலிருந்து தாக்கிய அவர்கள், தலையில் பலமாக வெட்டினர்.
சம்பவ இடத்திலேயே பிஜோய் உடனடியாக உயிரிழந்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
வங்கதேசத்தில் பிறந்த அமெரிக்கரான அவிஜித் ராய் (45) என்ற வலைதளக் கட்டுரையாளரை கடந்த பிப்ரவரி மாதம் வன்முறைக் கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிக் கொன்றது.
அந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தாவின் இந்தியத் துணைக் கண்டத்துக்கான பிரிவு (ஏ.க்யூ.ஐ.எஸ்.) அண்மையில் பொறுப்பேற்றது.
அந்தப் படுகொலையைத் தொடர்ந்து, ஒயாசிகுர் ரஹ்மான் என்ற வலைதளக் கட்டுரையாளரையும் மதவாதிகள் சிலர் வெட்டிக் கொன்றனர். இந்த நிலையில், மூன்றாவதாக ஆனந்த பிஜோய் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைக்கும் ஏ.க்யூ.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளதாக வலைதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-http://www.dinamani.com