யேமனில் விமானத் தாக்குதல் ஓய்ந்தும் படையினரிடையே தொடர்ந்து மோதல்

yemenசண்டையால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில், மனித நேயப் பணிகளை மேற்கொள்வதற்காக 5 நாள் போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

அதையடுத்து அந்த நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நிகழ்த்தி வந்த வான்வழித் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

எனினும், கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே ஆங்காங்கே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த அரை மணி நேரத்தில், யேமனின் தெற்குப் பகுதி நகரமான தாலேவைக் கைப்பற்றும் நோக்கில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நிகழ்த்தியதாக அரசுப் படையினரும், நகரவாசிகளும் தெரிவித்தனர்.

டாங்குகள், தொலைதூர எறிகுண்டுகள், ஏவுகணைகளைக் கொண்டு கிளர்ச்சியாளர்கள் நகருக்குள் தாக்குதல் நிகழ்த்தியதாக அவர்கள் கூறினர்.

சவூதி கூட்டுப் படை விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதைப் பயன்படுத்தி, தங்கள் நிலைகளை கிளர்ச்சியாளர்கள் பலப்படுத்தி வருவதாக அதிகாரிகளும், பழங்குடியினத் தலைவர்களும் குற்றம் சாட்டினர்.

கடந்த மார்ச் மாதம் முதல் யேமனில் நடைபெற்று வரும் சண்டையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சண்டை முடிவுக்கு வந்து, இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம்தான் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.

-http://www.dinamani.com