கராச்சியில் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 45 ஷியா முஸ்லிம்கள் பலி

shiaபாகிஸ்தானின் கராச்சி நகரில் ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்கள் சென்ற பேருந்து மீது இஸ்லாமிய தேசம் அமைப்பைச் சேர்ந்த (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டு நடத்திய தாக்குதலில், 16 பெண்கள் உள்பட 45 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து கராச்சி போலீஸார் தெரிவித்ததாவது:

கராச்சியின் டவ் மருத்துவக் கல்லூரி அருகே 60 பேருடன் சென்ற பேருந்து மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் சுமார் 8 பேர் துப்பாக்கிகளால் சுட்டனர்.

பின்னர் அந்தப் பேருந்தின் உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதில் 45 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த நபர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

சிந்து பகுதி காவல்துறை ஆய்வாளர் குலாம் ஹைதர் ஜமாலி கூறுகையில், “இது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்’ என்றார். மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “பயங்கரவாதிகள், பேருந்துக்குள் நுழைந்து பயணிகளை அவர்களது தலையில் சுட்டுக் கொன்றனர்’ என்றார்.

ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு: கராச்சி தாக்குதலுக்கு இராக், சிரியாவில் செயல்படும் இஸ்லாமிய தேசம் பயங்கரவாத அமைப்புடன் கூட்டணி சேர்ந்துள்ள “ஜுண்டுல்லா’ பயங்கரவாத அமைப்புப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றை தொடர்பு கொண்டு, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அகமது மர்வாத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்தார்.

கராச்சியில் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் அந்த அமைப்பினர் விட்டுச் சென்ற துண்டுபிரசுரத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், பாகிஸ்தான் அரசு சார்பில் எந்த பயங்கரவாத அமைப்பின் பெயரும் வெளியிடப்படவில்லை.

காவல் துறையினர் உடையில் வந்த பயங்கரவாதிகள்: தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், காவல்துறையினர் போல் உடையணிந்து வந்ததாக காயமடைந்தோரில் ஒருவர் தெரிவித்ததாக மீட்புக் குழுவினர் கூறினர்.
தாக்குதலில் கொல்லப்பட்டோர் அனைவரும் ஷியா இஸ்மாயிலி சமூகத்தினர் என்றும், பேருந்தில் வேலைக்காக சென்றபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன், பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். கராச்சி தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கையில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் ரத்து செய்து விட்டார்.

மோடி கண்டனம்

புது தில்லி, மே 13: கராச்சியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது: கராச்சியில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல், மிகவும் கவலையளிக்கிறது. இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறோம். இந்த துயரமான சூழ்நிலையில், பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இருப்போம். காயமடைந்த அனைவரும் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றார் மோடி.

-http://www.dinamani.com