யேமன் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க ஐ.நா. வேண்டுகோள்

yemenயேமனில் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாகப் பல்வேறு தரப்பினரும் அறிவித்ததை முற்றிலும் கடைப்பிடிக்குமாறு ஐ.நா. வேண்டுகோள் விடுத்தது.

யேமனுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் இஸ்மாயில் ஷேக் அகமது, அந்த நாட்டுத் தலைநகர் சனாவில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: தாக்குதல் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுவது கவலை அளிக்கிறது. சண்டையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மருந்து உள்ளிட்ட உதவிப் பொருள்கள்களை அளிப்பதற்கு அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட, உதவிப் பொருள்களை மக்களுக்கு கொண்டு செல்ல உதவும் கட்டமைப்புகளை இலக்கு வைத்து எந்த தாக்குதலும் நிகழ்த்தப்படக் கூடாது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி தலைமையிலான கூட்டுப் படை யேமனில் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதலை நிறுத்துவதாக கடந்த வாரம் அறிவித்தது.

கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினாலும் வான்வழித் தாக்குதலிலானாலும் பாதிக்கப்பட்ட யேமன் மக்களுக்கு மருந்து உள்ளிட்ட உதவிப் பொருள்கள் விநியோகிக்க வகை செய்யும் விதமாக இந்த அறிவிப்பை சவூதி வெளியிட்டது.

சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் கூட, கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருவதாக சவூதி குற்றம் சாட்டியது. யேமன் கிளர்ச்சியாளர்களும் முன்னாள் அதிபர் சலே ஆதரவுப் படையினரும் சவூதிப் பகுதிக்குள் வெடிகுண்டுத் தாக்குதல், பீரங்கித் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக சவூதி கூறியது.

கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்ட பிறகும், யேமன் தரப்பிலிருந்து புதன்கிழமை வரை 12 முறை அமைதி ஒப்பந்த மீறல் நடைபெற்றது என்றும், வியாழக்கிழமை இரவும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் சவூதி கூட்டுப் படை செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அகமது அல்-அசிரி கூறினார்.

கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. எனினும் யேமன் தரப்பிலிருந்து தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மருந்து உள்ளிட்ட உதவிப் பொருள்களைக் கொண்டு சேர்க்க வகை செய்யும் விதத்தில், அனைத்து தரப்பினரும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று யேமனுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் இஸ்மாயில் ஷேக் அகமது வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதி திரும்பியுள்ளபோதிலும், தயீஸ், தலே, எண்ணெய் வளம் மிக்க மாரிப் ஆகிய இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவுப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா.வின் தகவலின்படி, யேமன் உள்நாட்டுச் சண்டையில் இது வரை சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர். சுமார் 6,000 பேர் காயமடைந்தனர்.

-http://www.dinamani.com