யேமன் அமைதிப் பேச்சு; கிளர்ச்சியாளர்கள் புறக்கணிப்பு: சவூதியில் 400 பேர் பங்கேற்பு

yemenயேமனில் நிலையான அமைதியை ஏற்படுத்துவது குறித்து சவூதி தலைநகர் ரியாதில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர்.

யேமனில் கடந்த ஒன்றரை மாத காலமாக நிகழ்த்தி வந்த வான்வழித் தாக்குதலை நிறுத்துவதாக, சவூதி கூட்டுப்படை கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

யேமனில் அதிபர் மன்சூர் ஹாதி மீண்டும் ஆட்சி அமைக்கவும், அந்த நாட்டில் நீடித்த அமைதி திரும்பவும், ஐ.நா. முயற்சியில் சவூதி தலைநகர் ரியாதில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, மூன்று நாள் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், யேமனில் புதிய அரசியலமைப்புச் சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.

பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்துவது குறித்து யேமனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ரியாதில் எடுக்கவுள்ள தீர்மானங்களை அனைத்து தரப்பினரும் ஏற்க வேண்டும் என்று முடிவாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேயின் மக்கள் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்கிறது.
ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதிக்கள் அமைதிப் பேச்சில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். பேச்சுவார்த்தை யேமனில் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், யேமனில் வான்வழித் தாக்குதல் நடத்திய கூட்டுப் படைக்குத் தலைமை வகித்தது சவூதி அரேபியா என்னும் நிலையில், அந்த நாட்டில் நடக்கும் பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதாக அவர்கள் கூறினர்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனின் வடக்குப் பகுதியில் கணிசமான பகுதியைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
தெற்குப் பகுதியில் இக்குழுவினர் தீவிரத் தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கினர். அதே நேரத்தில், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு ஆதரவான ராணுவத்தினரும் அரசுப் படைகளுடன் மோதினர்.

இந்நிலையில், அதிபர் மன்சூர் ஹாதி நாட்டைவிட்டு வெளியேறி சவூதியில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து, சவூதி தலைமையிலான கூட்டுப் படை யேமன் கிளர்ச்சியாளர்கள் மீதும், சலே ஆதரவுப் படையினர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. மார்ச் மாத

இறுதியில் தாக்குதல் தொடங்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நிறுத்தப்பட்டுப் பேச்சுவார்த்தை அறிவிக்கப்பட்டது.

யேமனில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும் 6,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் ஐ.நா. தெரிவித்தது.

-http://www.dinamani.com