“ரமாடி நகரம் வீழ்ந்தது பின்னடைவே’: அமெரிக்கா ஒப்புதல்

isis-india2இராக்கில் ரமாடி நகரை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றியிருப்பது, அந்த அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவே என அமெரிக்கா கூறியது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் எரிக் ஷுல்ட்ஸ் திங்கள்கிழமை கூறியதாவது:
ரமாடி நகருக்காக கடந்த 18 மாதங்களாகவே சண்டை நிகழ்ந்து வருகிறது.

ஆனால், ரமாடி நகரம் வீழ்ந்தது அந்தப் போரில் ஏற்பட்ட பின்னடைவு என்பதில் சந்தேகம் கிடையாது.

ரமாடி நகரம் மீட்கப் படும் வரை, அங்கு அமெரிக்கக் கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நிகழ்த்தும் என்றார் அவர்.

இராக்கின் அன்பார் மாகாணத் தலைநகர் ரமாடியை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.
அந்த நகரைப் பிடிப்பதற்கான சண்டையில், ராணுவத்தினர், பொதுமக்கள் உள்பட 500 பேரை பயங்கரவாதிகள் படுகொலை செய்ததாக அன்பார் மாகாண அரசு கூறியது.

மேலும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி 8,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறினர்.

ரமாடி நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க, ஷியா பிரிவுப் படையினருக்கு அதிபர் அல்-அபாதி ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார்.
அதையடுத்து, அந்த நகருக்கு அருகிலுள்ள இராக் ராணுவ முகாம்களில் ஏராளமான ஷியா படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

-http://www.dinamani.com